உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

மேனகா

மாக இருக்கிறது; உட்கார நினைத்துப் படுக்கையை விட்டு எழுவாளானால் மயங்கிக் குப்புற விழுந்து விடுகிறாள். இவளுடைய நிலைமையைக் காண கல்லும் கரைந்துருகும்; கட்டைகளும் வாய்விட்டுப் புலம்பும். தன் புருஷனே வண்டியில் அறைபட்டவர் என்பதை யறிந்தவுடன் இவ ளுடைய உயிர் அநேகமாய்ப் போய்விட்டது. துரைஸானியின் பெருமுயற்சியால் உயிர் நிற்கிறது. இந்த நிலைமையில் இவள் தன்னுடைய புருஷனைப் பார்க்கவேண்டுமென்று பதறுகிறாள்; தான் பார்ப்பதற்குள் அவர் உயிர் துறந்து விடுவாரோ என்று துடிதுடிக்கிறாள். அதே பித்தாக நிமிஷத்துக்கு நிமிஷம் வேண்டிக் கெஞ்சுகிறாள். கடிதங்களைப்பற்றிய விவரங்களை நாங்கள் இவளிடம் தெரிவித்தோம். புருஷன் இவள் மேல் அருவருப்புக் கொண்டிருப்பதாயும், இப்போது அவரைப் பார்த்தால் அவர் ஆத்திரப்படுவார் என்றும், அதனால் இந்த ஹீனஸ்திதியில் அவருடைய உயிருக்கே மோசம் வந்துவிடு மென்றும் துரைஸானி சொன்னாள். கடிதங்களின் வரலாற்றைக் கேட்க, அவள் இடியோசையைக்கேட்ட நாகமென்ன திடுக்கிட்டு கலங்கினாள்; இந்த அபவாதத்திற்கு ஆளானபின், தான் உயிரை வைத்துக் கொண்டிருக்கக் கூடாதென்றும், அவரை ஒருமுறை பார்த்துவிட்டு அவருடைய காலடியிலேயே விழுந்து உயிரை விட்டுவிடவேண்டுமென்றும், தன்னை அவரிடம் அழைத்துப் போகும்படியும் சொல்லி மன்றாடுகிறாள். இவளைக் கண்டால் அவர் பிழைக்கமாட்டா ரென்றும், இல்லையானால் பிழைத்துக் கொள்ளலாமென்றும், வீணில் ஆத்திரப்பட்டு அவரைக் கொல்லக்கூடாதென்றும் துரைஸானி வற்புறுத்திச் சொல்லுகிறாள்; நோயாளியான தன்னையும் கொண்டுபோய் அவருக்கருகில் ஒரு படுக்கையில் விட்டு வைத்தால், அவரைப் பார்த்துக்கொண்டு அருகிலாயினும் இருப்பேனென்று இவள் சொல்லுகிறாள்; அப்படிச் செய்வது இருவருக்கும் ஆபத்தானதென்றும், இன்னம் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/89&oldid=1251954" இலிருந்து மீள்விக்கப்பட்டது