பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

சொன்னார். கொண்டு வந்ததும், தாமே அங்குக் கிடந்த மலத்தை அப்புறப்படுத்தினர். அருகிலிருந்த தொண்டர்கள் அவ்வேலையைத் தாங்கள் செய்வதாகக் கூறித்தடுத்தார்கள். அடிகள் அதற்கு உடன்படவில்லை. மாளிகைக்குத் திரும்பியதும், அவருடைய பேர்த்தியான மனுகாந்தி, “பாபு மலம் வாரும் வேலையை நீங்களே செய்ய வேண்டுமா ? அருகிலிருந்த என்னைச் செய்யச் சொல்லி இருக்கலாமல்லவா?” என்று வருத்தத்துடன் கேட்டாள்.

அதற்கு அடிகள், ‘நீ அவ்வேலையைச் செய்வதால் மிகுந்த பயன் விளையாது. நான் செய்வது தான் சரி. அப்போதுதான் அங்கு வாழும் மக்கள் திருந்துவார்கள்’ என்று விடையளித்தார். அன்றிலிருந்து அச்சந்தில் வாழ்ந்த மக்கள் தெருவில் மலங்கழிப்பதில்லை.

மேற்கூறிய செயல்களிலிருந்து அடிகளின் சீர்திருத்த உள்ளம் புலனாகும். அடிகள் வாய்ச் சொல் வீரரல்லர்; செயல் வீரர்.

காந்தியடிகளின் கொள்கைகளில் தலையாயது தீண்டாமை ஒழிப்புக் கொள்கை. நாட்டில் பல கோடி மக்களைத் தீண்டத் தகாதவர்களென்று சேரியில் ஒதுக்கி வைப்பதைப் பெரிய பாவமென்று அவர் கருதினார். அப்பாவத்திற்குரிய தண்டனை தான் பெரும் பூதமாக உருவெடுத்து ஆயிரக் கணக்கான இந்தியர்களின் உயிரைக் குடித்தது