பக்கம்:வழிப்போக்கன்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

"தீர்க்ச சுமங்கலீ பவ!" என்று வாழ்த்திய சர்மா, 'இன்று தான் நாம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்திருக்கிறோம், என் மனம் இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது. இன்னும் ஒரு வாரம் எல்லோரும் இங்கேயே தங்கிவிட்டுப் போகலாம். அடுத்த சனிக்கிழமை வேங்கடரமண சுவாமிக்குப் பூஜை செய்து பிரசாதம் பெற்றுக் கொண்ட பிறகு ஊருக்குப் போகலாம். அப்போதுதான் எனக்குத் திருப்தி ஏற்படும்" என்றார் சர்மா.

"சுவாமி காரியத்துக்கு என்ன தடங்கல் சொல்லப் போகிறோம். தங்கள் விருப்பப்படியே செய்து விடுவோம்" என்றார்கள் காமுவின் தந்தையும் கங்காதரய்யரும்.

அந்த ஒரு வாரம் காமுவும் சகுத்தலாவும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியவில்லை. அக்கா உங்களைப் போன்ற உயர்ந்த குணம் படைத்த பெண்களை நான் பார்த்ததே இல்லை. உங்கள் பொறுமையும், கபடமற்ற குணமும், அன்புப் பேச்சும், சிரித்த முகமும் யாருக்கு உண்டு? உங்களை ஆஸ்பத்திரியில் கண்ட பிறகு என் மனமே மாறிவிட்டது. அக்கா! நீங்கள் நல்லபடி பிழைத்தெழ வேண்டும் என்பதற்காக எத்தனையோ தெய்வங்களைத் தினமும் வேண்டிக் கொண்டிருந்தேன். என் பிரார்த்தனை வீண்போகவில்லை. சுந்தரமும் நீங்களும் சந்தோஷமாக வாழ வேண்டும். இப்போது அதுதான் என்னுடைய ஆசை. இனி இந்த உலகத்தில் எனக்கென்று தனிப்பட்ட இன்பம் எதுவும் கிடையாது. நீங்கள் அடையும் மகிழ்ச்சிதான் என்னுடைய மகிழ்ச்சி. இனி நான் நீங்களாகவே வாழப் போகிறேன் அக்கா இன்று முதல் நான் சகுந்தலா இல்லை. காமு! ஆமாம், காமுவாக வாழப்போகும் சகுந்தலா!"

இந்த வார்த்தைகளைக் கேட்டபோது காமுவின் கண்களில் நீர்த் திரையிட்டது.

"நீ சொல்வது எனக்கு ஒன்றுமே புரியவில்லை, சகுந்தலா!"

"உங்களுக்குப் புரியாது அக்கா, புரியாது. நீங்கள் ஒரு குழந்தை!" என்றாள் சகுந்தலா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/130&oldid=1313662" இலிருந்து மீள்விக்கப்பட்டது