பக்கம்:வழிப்போக்கன்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

131

அன்று சனிக்கிழமை. வேங்கடரமண பூஜை முடிந் ததும் சர்மா ஒவ்வொருவராகப் பூஜை அறைக்கு அழைத்துப் பிரசாதம் வழங்கினர். பிறகு எல்லோரும் சாப்பிட்டு முடிந்ததும், சர்மா கங்காதரய்யரையும், காமுவின் தகப்பனரையும் அழைத்துக்கொண்டு வாசல் வராந்தாவில் போய் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். பேச்சுக்கு இடையில் சகுந்தலாவைக் கூப்பிட்டு, "சுந்தரை வரச் சொல்லு!"என்றார் சர்மா.

சுந்தரம் அவர் எதிரில் போய் நின்றான்.

"வா, சுந்தரம்! நான்தான் கூப்பிட்டேன். மேற்கொண்டு என்ன செய்யப் போவதாக உத்தேசம் உனக்கு? பட்டணத்தில் ஏதாவது வேலைக்குப் போகப் போகிறாயா?” என்று கேட்டார் சர்மா.

"எனக்கு ஒன்றும் தோன்றவில்லை மாமா பட்டணத்தில் எந்த வேலையும் சரிப்பட்டு வரவில்லை எனக்கு. போர்டு எழுதிப் பார்த்தேன். பத்திரிகைகளுக்குச் சித்திரம் வரைந்தேன். புத்தகங்களுக்கு அட்டைப் படம் எழுதினேன். எல்லோரும் என் திறமையைப் பாராட்டுகிறார்கள். பணம் தான் கொடுப்பதில்லை. தமிழ்நாட்டில் இன்னும் சித்திரக் கலைஞர்களுக்குரிய மதிப்பு ஏற்படவில்லை. கலையை மதிப்ப தாகச் சொல்கிறவர்கள் கலைஞனை மதிப்பதில்லை. மிதிக்கிறார்கள்" என்றான் சுந்தரம்.

"அப்படியானல் வேறு என்னதான் செய்யப் போகிறா ய்?" என்று கேட்டார் சர்மா.

"நீங்கள் என்ன சொல்லுகிறீர்களோ, அதன்படி செய்கிறேன், என்னைத் தாங்கள்தான் கைதுக்கி விட வேண்டும்."

"சகுந்தலா! அந்தக் கவரை இங்கே கொண்டுவாம்மா” என்றார் சர்மா. சகுந்தலா கவரைக் கொண்டு வந்து கொடுத்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/131&oldid=1313664" இலிருந்து மீள்விக்கப்பட்டது