பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நடக்காத கதை

199


"அந்த நாய்ங்க வீட்டுக் கெல்லாம் நாம் போகவே படாதுங்கறேன்!-நீ பேசாம இரு; தர்மராஜா கோயில் உற்சவம்தான் நாளையோடு முடிஞ்சுபோவுதே?-இந்தப் பத்து ராத்திரியும் அம்மாம் பெரிய வெளக்கைத் தூக்கிக் கிட்டு நான் ஏன் தர்மராஜா சாமியோடு ஊரையெல்லாம் சுத்திச்சுத்தி வாரேன் தெரியுமா, காத்தாயி?-எல்லாம் உனக்காகத்தான்! தினம் தினம் கூலியைக்கூட வாங்கிக் கொள்ளாம ராவுத்திரை இல்லே சேர்த்து வைக்கச் சொல்லியிருக்கேன்? நாளைத் திருநாள் முடிஞ்சுதுன்னா, நாளன்றைக்குக் காலையிலே இந்தக் கையிலே முழுசா இருவது ரூவா இருக்கும். அப்புறம் நமக்கென்ன குறைவு, காத்தாயி? நம்ம வீட்டிலும் தீபாவளிதான் அந்தப் பயல் பெண்டாட்டிக்குப் பட்டுப் புடவை எடுத்துக் கொடுத்தாக்கே, நான் உனக்கு ஒரு பருத்திப் புடவையாச்சும் எடுத்துக் கொடுக்கமாட்டேனா?” என்றான் கண்ணுச்சாமி.

அந்த வருஷம் ஆலங்குடியில் தர்மராஜா கோயில் உற்சவம் ஒரே அல்லோல கல்லோலப் பட்டது. காரணம், யாரோ ஒரு இரும்புக் கடைச் செட்டியார் மேற்படி உற்சவத்தை நடத்தி வைப்பதற்கு ஒப்புக் கொண்டதுதான். அவரைப்பற்றி ஊரில் பலர் பலவிதமாகப் பேசிக் கொண்டார்கள். “ஆமாம், அவன் கள்ள மார்க்கெட்டில் கொள்ளையடித்த காசெல்லாம் கரைய வேண்டாமா?" என்றனர் சிலர். "பண்ணிய பாவத்துக்கு ஏதாவது பிராயச் சித்தம் செய்ய வேண்டுமோ, இல்லையோ! "என்றனர் சிலர். யார் எப்படிப் பேசிக்கொண்டாலும் கண்ணுச்சாமியைப் பொறுத்தவரையில் செட்டியார் நல்லவராய்த்தான் இருந்தார். திருவிழாவின்போது ‘காஸ் லைட்' கடை அல்லாப் பிச்சை ராவுத்தரிடமிருந்து அவனுக்குத் தினசரி கிடைத்து வந்த இரண்டு ரூபாயைத் தவிர செட்டியாரும் மேற் கொண்டு ஒரு ரூபாய் கொடுத்து வந்தார். கண்ணுச்சாமி, செட்டியார் கொடுத்து வந்த ஒரு ரூபாயை வீட்டுச் செலவுக்கு வைத்துக்கொண்டு, அல்லாப் பிச்சை ராவுத்தரின் இரண்டு ரூபாயை அவரிடமே சேர்த்து வைத்தான். பத்து நாள் திருவிழாவும் முடிந்தபிறகு, அந்த இருபது ரூபாயை மொத்தமாக வாங்கித் தீபாவளி கொண்டாடலாமென்பது அவனுடைய எண்ணம்.

அன்று பத்தாவதுநாள். வழக்கம்போல் இரவு பத்து மணிக்குப் பிறகு சுவாமியின் திருவீதி உலா ஆரம்பமாயிற்று. கண்ணுச்சாமி கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு 'காஸ் லைட்' டைத் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டான். அவனைப் பின்பற்றி அவனுடன்