"காத்தாயி! அந்தப் பக்கிரிப் பயல் போற 'மிடுக்' கைப் பார்த்தியா? மானத்தைப் பார்த்துக்கிட்டு இல்லே அவன் நடக்கிறான்? என்னதான் வாழ்வு வந்தாலும் இப்படியா?" என்று அதிசயித்தவண்ணம், கையிலிருந்த புகையிலையிலிருந்து கொஞ்சம் திருகி எடுத்து வாய்க்குள் திணித்துக்கொண்டான் கண்ணுச்சாமி.
வீட்டுக்குள் ஏதோ வேலையாயிருந்த காத்தாயி வெளியே வந்து பார்த்தாள். பக்கிரி ராணுவ உடையுடன் கவாத்து நடை நடந்து சென்று கொண்டிருந்தான். “ஆமாம், சண்டைக்குப் போய் வந்த சூரர் இல்லே; அப்படித்தான் நடப்பாரு!" என்றாள் காத்தாயி.
"ஊம்....இவன் சண்டைக்குப் போய் என்னத்தைக் கிழிச்சிப்பிட்டான்? அங்கே இந்த வெள்ளைக்கார சோல் ஜருங்க இருக்கானுங்க பாரு, அவனுங்க பூட்ஸைக் கீட்ஸைத் தொடைச்சுக்கிட்டு இருந்திருப்பான்!"
"நல்லாச் சொன்னே இருட்டிலே ஈச்ச மரத்தைக் கண்டா, “ஐயோ, பிசாசு, ‘ன்னு அவன் அலறிக்கிட்டு ஓடுவானே!"
"அதுக்கில்லை காத்தாயி, நான் சொல்றது! மனிசன் முன்னே பின்னை இருந்ததைக் கொஞ்சமாச்சும் நினைச்சுப் பார்க்க வேணாம்?-அந்தப் பயல் சண்டைக்குப் போறதுக்கு முந்தி நம்மைத் தேடி நம்ம வீட்டுக்கு வந்து ஒரு நாளாவது பேசிவிட்டுப் போகாமல் இருந்திருப்பானா?-நீயே சொல்லு!
“ஐயோ அதை ஏன் கேட்கிறே? இவன்தான் இப்படின்னா, இவன் பெண்டாட்டியிருக்காளே பெரியாத்தா, அவளுக்கு எம்மா ‘ராங்கி ‘ங்கிறே? தீவாளிக்கு ஒரு பட்டுப் புடவை வாங்கிக் கொடுத்துட்டாலும் கொடுத்துட்டான், அவள் என்னமா ஒடிஞ்சி போறாங்கிறே? அன்னிக்கு எதுக்கோ அவங்க வீட்டுக்குப் போயிருந்தேன்; நம்ம பையனும் கூட வந்திருந்தான். அவங்க பொண்ணு திண்ணைமேலே வாங்கி வச்சிருந்த பட்டாசுக் கட்டை எடுத்துப் பார்த்துக் கிட்டு இருந்தது. நம்ம பையன் ஒடிப் போய் அந்தப் பெண்ணு கையிலேயிருந்த பட்டாசுக் கட்டை வாங்கிப் பார்த்தான். அதிலே என்ன தப்பு? அதைப் பார்த்ததும் அந்த ராங்கிக்காரி திடுதிடுன்னு என்னமா ஓடி வந்து 'வெடுக்' குன்னு பிடுங்கிக் கிட்டாங்கிறே? எனக்கு ஆத்திரமாவந்திச்சு. நம்ம பையன்முதுகிலே நாலு அறை அறைஞ்சு உடனே கூட்டியாந்துட்டேன்!"