பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
117

நடுத்தர வயதில் நல்ல அனுபவமும், ஆன்ற கல்வி அறிவும் கிடைக்கின்றன என்று முன்னமே கூறினோம் அத்துடன் நமது இளமைக் கால கனவும். நம்முடைய குடும்பத்தின் சுமையும் சேர்ந்து தாக்கும் பொழுது எதைச் செய்வது என்னும் கவலையல்லவா வந்து கழுத்தைப் பிடிக்கின்றது?

ஆகவே கவலைகள், நோய்கள், தேகத்தின் தளர்ச்சிகள், அடுத்தடுத்து வரும் ஆசைகள் நிறைவேறாத செயல்கள், அத்தனைக்கும் ஈடுகொடுத்து இளமை நினைவுடன், வலிவான உடலுடன் வாழ வைக்கும் அரும்பணியை மேற்கொண்டிருப்பது உடற்பயிற்சிகள் தான். விளையாட்டுக்கள் தான்.

உடற்பயிற்சிதான் உடலுக்கு மெருகும் திறமும் கொடுக்கும். தரமும் தெம்பும் அளிக்கும். நடுத்தர வயதில் எந்தப் பயிற்சியினை எப்படிச் செய்வது? என்ற கேள்வி எழத்தான் செய்யும்.

அதற்குரிய ஆசிரியர்களை அணுகித் தெரிந்து கொண்டு முறையாகச் செய்து பயன்கள் பெறுக என்பதே இந்தக் கேள்விக்குரிய விடையாகும்.

சிறு பிள்ளையிலிருந்தே உடற்பயிற்சி பழக்கமில்லை என்றால், மாலை நேரங்களில் விளையாடினால் கூட போதுமானது. மாலை நேர விளையாட்டுக்களானது மனக் கவலைகளில் இருந்து விடுபடவும், தூய காற்றினை தேகத்திற்குத் தரவும், அதுவே எளிய உடற் பயிற்சி யாகவும் அமைந்துவிடுகிறது. வழி வகுக்கிறது.