விவேகசிந்தாமணி 21-40

விக்கிமூலம் இலிருந்து
[[]] :[[]] :[[]] :[[]] :[[]] :[[]]



விவேகசிந்தாமணி - பாடல்கள் 21-40[தொகு]

பாடல்: 21 (பொன்னொடுமணி)[தொகு]

பொன்னொடு மணியுண்டானால் புலையனுங் கிளைஞனென்பான்
தன்னையும் புகழ்ந்து கொள்வான் தகுதியில் மணமுஞ் செய்வான்
மன்னரா யிருந்த பேர்தான் மாறுறக் கெட்டா ராயின்
பின்னையும் யாரோ வென்றே பேசுவார் ஏசு வாரே.


பாடல்: 22 (வேதமோதிடும்)[தொகு]

வேத மோதிடும் வேதியர்க் கோர்மழை
நீதி மன்னர் நெறியினுக் கோர்மழை
மாதர் கற்புடை மங்கையர்க் கோர்மழை
மாத மூன்று மழையெனப் பெய்யுமே


பாடல்: 23 (அரிசிவிற்றிடும்)[தொகு]

அரிசி விற்றிடும் அந்தணர் வெறுத்து
வரிசை தப்பிய மன்னரை விடுத்து
புருடனைக் கொன்ற பூவையைக் கடுத்து
வருகின்ற முகில்களும் வானில் விரையுமே. ???

பாடல்: 24 (திருப்பதிமிதியா)[தொகு]

திருப்பதி மிதியாப் பாதம் சிவனடி வணங்காச் சென்னி
இரப்பவர்க் கீயாக் கைகள் இனியசொல் கேளாக் காது
புரப்பவர் விழிகள் கண்ணீர் பொழிதரப் போகாத் தேகம்
இருப்பினும் பயன்தான் என்னே எரிப்பினு மில்லை தானே



பாடல்: 25 (தன்னுடலுக்)[தொகு]

தன்னுட லுக்கொன் றீந்தால் தக்கதோர் பலம தாகும்
மின்னியல் வேசிக் கீந்தால் மெய்யினில் வியாதி யாகும்
மன்னிய உறவுக் கீந்தால் மற்றது மயக்கமாகும்
அன்னிய ரற்றோர்க் கீந்தா லாருயிர்க் குதவி யாமே.

பாடல்: 26 (படியும்பொழுதே)[தொகு]

படியும் பொழுதே வதைத்திடும் பச்சைநா வியைநம்பலாம்
பழியறிந்தும் வழிமறித்திடும் பழைய கள்ளரை நம்பலாம்
கொடிய மதத்துடன் வளர்த்திடும் குஞ்சரத்தையும் நம்பலாம்
குறும்புபேசி நகைத்திடும் குமரர் தம்மையும் நம்பலாம்
கடையில்கணக் கெழுதிடும் கணக்கர் தம்மையும் நம்பலாம்
காக்கைபோல் விழிபார்த்திடும் காணி யாளரை நம்பலாம்
நடைகுலுக் கிமுக மினுக்கி நகைநகைத்திடு மாதரை
நம்பொணாதுமெய் நம்பொணாது நம்பொணாத மெய்யாகுமே.


பாடல்: 27 (வண்டுகள்)[தொகு]

வண்டுக ளிருந்திடின் மெல்லிசை யொலித்திடும்
தண்டமி ழிருந்திடின் சங்கமாய்ச் சிலிர்ப்புறும்
குண்டுணி யிருந்திடின் கோள்களே உதிர்ந்திடும்
பெண்டுக ளிருந்திடின் பேரிடிச் சண்டையே.



பாடல்: 28 (கற்புடைமாத)[தொகு]

கற்புடை மாதராடை கவரிமான் மயிரின் கற்றை
வெற்புறு வேங்கையின் றோல் வீரன்கை விளங்கு கூர்வேல்
அற்பர்தம் பொருள்கள் தாமு மவரவ ரிறந்த பின்னே
பற்பலர் கொள்வர் தானே பாரினி லுண்மை யாமே.


பாடல்: 29 (வீணர்தான்)[தொகு]

வீணர் தாந்தங்கம் பூண்டால் வெறும் மேற்பூச் சென்பார்
பூணுவார் மேற்பூச்சிட்டால் பொருந்திய தங்க மென்பார்
காணவே பனையின் கீழ்பால் பருகினுங் கள்ளே யென்பார்
மாண்புறின் புல்லர் பேச்சும் மானிடர் மெச்சி டாரே.

பாடல்: 30 (மூப்பிலாக்)[தொகு]

மூப்பிலாக் குமரி வாழ்க்கை முனிவிலா அரசன் வீரம்
காப்பிலா விளைச்சல் பூமி கரையிலா திருக்கு மேரி
கோப்பிலாக் கொண்ட கோலம் குருவிலா துற்ற கல்வி
ஆப்பிலாச் சகடு போல அழியுமென் றுரைக்க லாமே.



பாடல்: 31 (அரவினை)[தொகு]

அரவினை யாட்டுவாரும் அருங்களி றோட்டு வாரும்
இரவினில் தனிப்போ வாரு மிரையுநீர் நீந்து வாரும்
விரைசெறி குழலி யான வேசையை விரும்பு வாரும்
அரசனைப் பகைத்திட் டாரு மாருயி ரிழப்பர் தாமே.


பாடல்: 32 (வாழ்வதுவந்த)[தொகு]

வாழ்வது வந்த போது மனந்தனில் மகிழவேண்டா
தாழ்வது வந்த தானால் தளர்வரோ தக்கோர் மிக்க
ஊழ்வினை வந்த தானால் ஒருவரால் விலக்கப் போமோ
ஏழையா யிருந்தோர் பல்லக் கேறுதல் கண்டி லீரோ.


பாடல்: 33 (பருப்பதம்போல்)[தொகு]

பருப்ப தம்போல் நிறைந்திடு நவமணிப் பரிசுகள் கொடுத்தாலும்
விருப்ப நீங்கிய கணவரைத் தழுவுதல் வீணதாம் விரிமணத்து
குருக்கொள் சந்தனக் குழம்பினை யன்போடு குளிர்தர அளித்தாலுஞ்
செருக்கு மிஞ்சிய வற்பர்தந் தோழமை செய்வ தாகாதே.


பாடல்: 34 (பெருத்திடு)[தொகு]

பெருத்திடு செல்வமாம் பிணிவந் துற்றிடில்
உருத்தெரி யாமலே ஒளிம ழுங்கிடும்
மருந்துள தோவெனில் வாகடத் தில்லை
தரித்திர மென்னுமோர் மருந்தின் தீருமே.



பாடல்: 35 (அத்தியின்மலரும்)[தொகு]

அத்தியின் மலரும் வெள்ளை யாக்கைகொள் காக்கை தானும் ??
பித்தர்தம் மனமும் நீரில் பிறந்தமீன் பாதந் தானும்
அததன்மால் பிரம தேவ னாலள விடப்பட் டாலும்
சித்திர விழியார் நெஞ்சம் தெளிந்தவ ரில்லை கண்டீர்.


பாடல்: 36 (கதலி வீரர்[தொகு]

கதலி வீரர் களத்திடை வையினும்
குதலை வாயில் குழவிகள் வையினும்
மதன லீலை மங்கையர் வையினும்
இதமுறச் செவிக்கின் பம்வி ளையுமே.


பாடல்: 37 (மானமுள்ளோர்கள்)[தொகு]

மானமுள் ளோர்க ளென்றும் மயிரறின் உயிர்வா ழாத
கானுறு கவரி மான்போல் கனம்பெறு புகழே பூண்பர்
மானமொன் றில்லார் தானே மழுங்கலாய்ச சவங்க ளாகி
யீனமாங் கழுதைக் கொப்பா யிருபபரென் றுரைக்க லாமே.


பாடல்: 38 (ஆசாரம்செய்)[தொகு]

ஆசாரம் செய்வா ராகி லறிவொடு புகழு முண்டாம்
ஆசாரம் நன்மை யாகு மவனியில் தேவ ராக்கும்
ஆசாரஞ் செய்யா ராகி லறிவொடு புகழு மற்று
பேசார்போ லூமை யாகிப் பிணியொடு நரகில் வீழ்வார்.


பாடல்: 39 (செல்வம்வந்துற்)[தொகு]

செல்வம் வந்துற்ற போது தெய்வமே நினைவு கொள்ளார்
சொல்வதை யறிந்து சொல்லார் சுற்றமுந் துணையும் பேணார்
வெல்வதே கரும மல்லால் வெம்பகை வலிதென் றெண்ணார்
வல்வினை விளைவும் பாரார் வாழுமிம் மண்ணில் மாந்தர்.

பாடல்: 40 (யானையைச்)[தொகு]

யானையைச் சலந்தனி லிழுத்த அக்கரா
பூனையை நிலந்தனிற் பிடிக்கப் போகுமோ
தானையுடன் மன்னன் தலம்விட் டேகினால்
சேனையென் செல்வமென் தியங்கு வார்களே.


பார்க்க
விவேகசிந்தாமணி01-20
விவேகசிந்தாமணி 41-60
விவேகசிந்தாமணி 61-80
விவேகசிந்தாமணி 81-100
"https://ta.wikisource.org/w/index.php?title=விவேகசிந்தாமணி_21-40&oldid=491784" இலிருந்து மீள்விக்கப்பட்டது