பக்கம்:இதுதான் திராவிடநாடு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

இதுதான் திராவிடநாடு

எந்த நாட்டின் பெயரும்கூட-இராமாயணம் குறிப்பிடும் புராணக் கற்பனை இலங்கை தவிர-வேறு எதுவும் வடதிசை மரபு அறியாதது.

புத்த சமயப் பிரசாரம் காரணமாகத் தற்செயலாக அசோகன், ஹர்ஷன் காலங்களில் பிற நாகரிக நாட்டவர் இந்தியாவுடன் கொண்ட தொடர்பன்றி, வடதிசை அரசர் பேரரசர் எத்தொடர்பும் வெளியுலகுடன் நாடியதில்லை. அவர்கள் இலக்கியத்தில் உலகம் என்பது வட இந்தியாவாகவே இருந்தது. தென்னகத்தைக்கூட அவர்கள் அறிந்ததில்லை. அதே சமயம் தமிழர் பண்டுதொட்டே இமய உச்சியில் ஏறித் தமிழ்க்கொடி பொறிக்கும் ஆர்வக் குறிக்கோள் உடையவராய் இருந்தனர்-திரைகடலோடியும் திரவியம் தேடு என்று சிறுவருக்கே போதித்தனர் !


10. கடலாட்சியும் கடற்படையும்

ஆரியர் வருவதற்குமுன் திராவிடருக்கு இருந்த கோட்டை கொத்தளங்கள், வீரம் செல்வம், உழவு தொழில் வளங்கள், வாணிக வளம் ஆகியவைபற்றி ஆரிய வேத உபநிடதங்களே ஏராளமாகச் சான்று பகர்கின்றன. ஆரியர் வறுமை வாழ்வு, வீரமற்ற வஞ்சகச் சூழ்ச்சி மரபு, தொழில் வாணிகமீது வெறுப்பு, உழவுமீது வெறுப்பு ஆகியவை இன்னும் ஆரிய வருணாசிரம மரபை உற்று நோக்குவோர்க்கு வெள்ளிடை மலையாக விளங்கும். திராவிட மரபுப்படி உழவுத் தொழிலுக்குரிய வேளாளரும் மற்றத் தொழிலாளரும் வீரமரபினருமே உயர் குடியினராகப் போற்றப்படுகின்றனர். ஆனால் ஆரிய வருண மரபில் அவர்கள் கடைப்படிக்கும் கீழ்ப்பட்டவர்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.