பக்கம்:இதுதான் திராவிடநாடு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

இதுதான் திராவிடநாடு

ஒரே தேசிய இனம் என்பது. பாரதமோ பண்டை உலகிலும் தேசிய இனமன்று, இன்றைய உலகிலும் ஒரு தேசிய இனமன்று. ஒரு தேசிய இனமாகவோ, தேசிய இனக் கூட் டுறவாகவோகூட அது வருங் காலத்தில் உருவாகும் வாய்ப்புடையதன்று. ஏனெனில் அத்தகைய தேசிய இனக் கூட்டுறவைக் குடியாட்சிப் பண்பு அளாவிய ஒரு உயிர்த் தேசிய இனமே வளர்த்து உருவாக்க முடியும். திராவிட இனத் தேசியம் அத்தகைய குடியாட்சிப் பண்புடைய உயிர்த் தேசியம். அதன் வழி நின்றால் தென் கிழக்காசியாவே, ஆசியாவே ஒரு உயிர்த்தேசியக் கூட்டுறவாக வளம் பெறமுடியும். வடதிசைப் போலித் தேசியமோ உருவாகாத் தேசியங்களை அடக்கியாள நினைக்கும் ஒரு செயற்கை ஏகாதிபத்தியம்-வெள்ளை ஏகாதிபத்தியம் உருவாக்கி இயங்கவிட்டுச் சென்ற குட்டி ஏகாதிபத்தியம். அதனால் உயிர்த் தேசியமாக இயங்கவும் முடியாது; உருவாகாத் தேசியங்களை உருவாக்கும் திராவிடப் பண்பாற்றலும் அதற்குக் கிடையாது.


12. பலமுக ஏகாதிபத்தியத்தின்
பல வேசக்குரல்கள்

உலகமெல்லாம் ஒன்றாக ஆகிவரும்போது, ஏனப்பா நீ பிரிவினை முழக்கம் செய்கிறாய்? 'ஒன்றுபட்டாலுண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே' என்ற பாரதிப் பாட்டை நீ அறியமாட்டாயா?

-இது பாரத தேசியத்தின் பரத நாட்டியக் குரல், உலக வேதாந்தக் குரல்; வெள்ளையர் கற்றுக் கொடுத்த ஏகாதிபத்தியக் கரத்தை உள்ளே ஒளித்துக் காட்டும் பசப்புக் குரல்.