பக்கம்:இதுதான் திராவிடநாடு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதுதான் திராவிடநாடு

43

ஒற்றுமைக்குப் பதில் பிரிவினையா? ஐயோ, தேசத்தைத் துண்டாடலாமா? கூறுபடுத்தலாமா?

இது துண்டாடப்பட்ட அரசியல் பிச்சை பெற்றவர்கள் சுதந்தர தேசியவாதிகளை நோக்கி அலறும் அலறல்.

ஆரியமாவது, திராவிடமாவது! அதெல்லாம் மலையேறிவிட்ட காலம். இனவேறுபாட்டை இந்த இருபதாம் நூற்றாண்டிலும் யாராவது கிளப்புவார்களா? யார் ஆரியர், யார் திராவிடர்? எல்லாம் ஒன்றுபட்ட ஒரே பாரதமாக உன் கண்களுக்கு விளங்கவில்லையா?

இது இனமற்ற தேசியம் பேசும் இனவேறுபாட்டுக்காரர் தாம் உட்கொண்ட அபினியை மற்றவருக்கும் முதலில் இலவசமாக ஊட்ட வரும் அன்புக் கீதம்.

திராவிடமா, அது என்ன மொழிச்சொல்? தனித்தமிழ்ச் சொல்லா? சமஸ்கிருதச் சொல்லாயிற்றே ! இலக்கியத்தில் அதற்கு வழக்கு உண்டா? வடவர் சொல்லையா தமிழர் வழங்குவது!

தனித்தமிழை வெறுப்பவர் மேற்கொள்ளும் தனித்தமிழ் வாதம். வடவரை எதிர்த்துப் பேசும் வடவர் கங்காணிகளின் நயவஞ்சகக் குரல் இது!

திராவிடம்! வெள்ளைக்காரன் உபயோகித்த, உற்பத்தி செய்த பெயராயிற்றே!

வெள்ளையன் உருவாக்கிய பாரத தேசியத்தை- அவன் பிரித்த பிரிவினையை-தம் முன்னோர் வழிவழிச் சொத்தாகக் கொண்டவர் கேட்கும் மடமை வினா இது.