குறட்செல்வம்/அருளும் பொருளும்

விக்கிமூலம் இலிருந்து


36. அருளும் பொருளும்


மானிட வாழ்க்கை அருள் நலத்தால் சிறக்கவேண்டிய ஒன்று. அருளின்பம் அன்பினால் பெறக்கூடிய ஒன்று. ஒன்றினைப் பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் காட்டப் பெறுவது அன்பு.

யாதொரு குறிக்கோளுமின்றி, காட்டப் பெறுவது அருள். இறைவன் உயிர்களிடம் காட்டுவது அருள். உயிர்கள் அருளைப் பெறுவதற்கு இறைவன்பாற் காட்டுவது அன்பு. இதனை,

".................... யாமிரப் பவை
பொன்னும் பொருளு போகமும் அல்ல
அருளும் அன்பும் அறனும் மூன்றும்"

என்று பரிபாடல் குறிப்பிடுகின்றது. இறைவன் உயிர்களுக்கு யாதொன்றும் எதிர்பாராமலேயே அருள் வழங்குகின்றான். அதனாலேயே அவனுக்குப் ‘பித்தன்’ என்று பெயர் வந்தது. “குறியொன்றும் இல்லாத கூத்து” என்று திருவாசகம் பேசுகின்றது.

இறை நெறி நிற்போரும், அருள் நலம் கனிந்தவர்களாக இருப்பர். தேனிலோ, உப்பிலோ ஊறிய பொருள் அவற்றின் சுவையைப் பெறுவதுபோல, இறைவனுடைய திருவருளை நினைந்து நினைந்து, அந்த இன்ப அனுபவத்தில் ஊறித் திளைத்தவர்கள் அருள் வசமாகி விடுவார்கள். அவர்களே அந்தணர்கள் — துறவிகள்—சான்றோர்கள் — அருளாளர்கள்.

இத்தகு சிறப்புடைய வாழ்க்கை எல்லாருக்கும் அமைவதன்று. பலர் அன்புடையராதல் உண்டு. மக்களிடத்திலும், இறைவனிடத்திலும் அன்பு காட்டுவார்கள். அருச்சனை செய்வார்கள். எனினும் இந்த அன்பு, அருள் /கருதிச் செய்யப்படுவது அன்று. அவர்களின் நோக்கம் பொருள் ஒன்றுதான். பொருளைக் கவர்வதற்கு, திட்டமிட்டு அன்பு காட்டுவர். அதற்குப் பெயர் அன்பன்று —நடிப்பு.

கவிஞர் பட்டுக்கோட்டை சொன்னது போல, வெள்ளாட்டுக்கு இரை வைக்கும் மனிதர்களின் கருணையை ஒத்தது. பொருள் கருதி ஏற்படும் அன்பு தொடராது—நிலை பெறாது. அவர்கள், தாம் கருதியதை முடிக்கக் காலத்தை எதிர்நோக்கி நிற்பர்.

அதாவது தம்மோடு பழகுகின்றவர்களின் மறதி, சோர்வு ஆகியவைகளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பர். காலம் வாய்க்கும்போது கருதியதை முடித்து காற்றெனக் கடுகி விடுவர்.

அத்தகையோரிடத்து ஒருபொழுதும் அன்பு இருந்ததில்லை. ஒரு வெளிமயக்கு இருந்தது. அவ்வளவுதான். அவர்களின் நோக்கம், குறிக்கோள் பொருள் ஒன்றுதான்.

நேர் வழியில், உழைப்பால் பொருளீட்ட முடியாதவர்கள், இந்த மறைமுக வழியைக் கையாளுவர். அவர்களிடத்து அன்பு இல்லை. அருளும் கிடைக்காது. அவம் பெருகும். இதனை,

அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.