குறட்செல்வம்/மழித்தலும் நீட்டலும்

விக்கிமூலம் இலிருந்து

35. மழித்தலும் நீட்டலும்!


தவம் ஒரு சோதனைப் பட்டறை. பட்டறையில் இடப்பட்ட பொன் தூய்மை பெற்று ஒளிர்தல் போல, தவத்தில் ஈடுபட்டோர் துன்பங்களால் தூய்மைபடுத்தப் பெற்று, ஒளி பெற்றுத் திகழ்தல் வேண்டும்.

துன்பம் இருவகையது. ஒன்று உடல்வழி வரும் பசி, நோய் முதலியன. பிறிதொன்று உயிர்வழி விருப்பு வெறுப்புக்களால் வரும் உணர்வுகள் ஆசைகள் முதலியன. இவ்விருவகைத் துன்பங்களையுமே கவலையின்றி, மகிழ்வுடன் ஏற்று அனுபவித்துத் திருவருளை நினைந்து வாழ்தல் தவம்.

அதனாலன்றோ திருவள்ளுவர், "உற்ற நோய் நோன்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை, அற்றே தவத்திற் குரு" என்று தெளிவாகத் தேற்றேகாரம் போட்டு அறிவுறுத்தினார்.

உற்ற நோய் நோற்றல் முதல் வகை. அந்நோயில் இருந்து விடுவித்துக் கொள்ள விரும்புதலும் விருப்பம், முயற்சி ஆகியவற்றின் காரணமாகப் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும் பிறிதொரு வகை.

தவம் செய்யும் ஒரு பழக்கம் உடற் பழக்கம்—உயிர் பழக்கமும்கூட. உடலையும் உள்ளத்தையும் முறைப்படி பழக்குதல் எளிதன்று. கிண்ணத்தில் தண்ணிரை நிரப்பி, எடுத்து கொண்டு ஓடுவது போல. கிண்ணம் ஆடினாலும் தண்ணிரும் அலையும்; வெளியே சிந்தும், தண்ணீர் அலைந்தாலும் ஒரோ வழி கிண்ணம் ஆடும். ஒடுவதோ ஒட்டம். இந்த அமைப்பில் ஒடவும் வேண்டும். கிண்ணத்தை ஆடாமல் பாதுகாக்கவும் வேண்டும். அதனுள் இருக்கும் தண்ணீர் அலைந்து வழியாமல் பாதுகாக்கவும் வேண்டும். இத்தகையதே தவம் செய்யும் முயற்சி.

நாம் வாழும் உலகியல் ஆசைகளால் நிறைந்து அலைவது. இதில் உடலையும் உயிரையும் ஒருங்கே பாதுகாக்க வேண்டும். உடல் கெட்டாலும் உயிர் கெடும் -உயிர், உணர்வு கெட்டாலும் உடல் கெடும். ஆதலால், உடலை, உயிர்நிலைப் பாதுகாப்பு என்று கருதுவதில் தவறில்லை.

உடல்நிலை உயிர் உணர்ச்சிகளைத் தோற்றுவிக்கும் நிலைக்களன். உடலியற் கூறுகளுக்கு ஏற்றவாறு, உயிர் உணர்ச்சிகள் தோன்றும் — வளரும். அதனாலன்றோ தவம் செய்வோர் உடல், ஆசைகளைத் தோற்றுவிக்கும் நிலைக்களனாக விளங்குவதை விரும்புவதில்லை.

ஆதலால். உடலைத் தவத்தால் வருத்துவர், உடல் அழகினைக் கெடுத்துக் கொள்வர். இவ் வழித் தோன்றியதே மழித்தலும், நீட்டலும் ஆகிய செய்முறை. ஒரோவழி நீட்டல் மட்டும் தன் இயல்பாகவே நிகழ்தல் உண்டு.

அதாவது தன்னையும், தன்னுடைய உடலையும் மறத்தலின் காரணமாகத் தோன்றுதல். எனினும் இங்கு நீளுதல் என்றின்றி நீட்டல் என்றே திருவள்ளுவர் விளை வழிப் படுத்திக் கூறி இருத்தலான் செய்முறை என்றே கொள்ளல் வேண்டும். திருவள்ளுவர் இச் செய்தவத்தின் முறையை மறப்பது போலப் பலர் கருதுகின்றனர். அதற்குக் காரணமாக இருப்பது,

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.

என்ற குறள். திருவள்ளுவர் உலகியல் முழுவதும் கண்டு உணர்ந்த சான்றோர். ஆதலின், அவர் முறையாகவே கூறியுள்ளார். அவர், மழித்தலையும் நீட்டலையும் முழுதுமாக மறுக்கவில்லை. அச் செயல் முறையைத் தன்னுடைய_உடலையும் உள்ளத்தையும் கட்டுப்படுத்திப் பழக்கத்திற்குச் சாதனமாகக் கைக் கொள்ளுவதற்கு உடன்படுகின்றார்.

தவம் முடிவல்ல முயற்சியே. இம் முயற்சியில் வெற்றி அடைவோர் சிலர் தோல்வியுறுவோர் பலர். ஆனாலும் தவம் செய்வதை மனப்பூர்வமான இலட்சியமாக ஏற்றுக் கொண்டு, தவம் செய்யும்பொழுது ஏற்படும் வெற்றித் தோல்விகள் வேறு.

அந் நிலையில் ஏற்படும் தோல்விகளை, தவறுகளைப் பற்றியதல்ல திருவள்ளுவரின் கவலை. தவம் செல்வாக்குடையது என்று கருதி அதனை மேற்கொள்வதின் மூலம், தம்முடைய உலகியல் வேணவாக்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று கருதி, உலகியல் வாழக்கையை, இலட்சியமாகக் கொண்டு அதனையடைய தவத்தினை ஒரு கருவியாகத் திட்டமிட்டு வஞ்ச மனத்தோடு மேற்கொள்வாரைப் பற்றியதே திருவள்ளுவரின் கவலை. இதனை,

வலியின் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்க் தற்று.

தவம்மறைந்து அல்லவை செய்தல் புதர்மறைந்து

வேட்டுவன் புள்சிமிழ்க் தற்று.

ஆகிய குறட்பாக்களில் வருகின்ற இரு உவமைகளும் திட்டமிட்டுச் செய்கின்ற நிகழ்ச்சிகளை குறிப்பனவாக இருப்பது அறிந்துணரத் தக்கது.

ஆதலால், உலகியல் இன்பங்களை அடைவதை நோக்கமாகக் கொண்டு, தவ வேடம் பூண்டாலும் அதாவது தவம் செய்வதற்குத் துணை செய்யக்கூடிய மழித்தல், நீட்டல் ஆகிய சாதனங்களை மேற்கொண்டாலும் தாம் விரும்பிய — விருப்பு வெறுப்புகளுக்கு ஆளான உலகியலையே செய்வதால், திருவள்ளுவர் அவர்களை நோக்கி அறிவுறுத்துகின்றார். இன்றைய நிலையை நுண்ணியதாக உணர்ந்தவர்களுக்கு இந்த உரை விளங்கக் கூடும்.

உலகம் பழித்ததை ஒழிக்கவன்றோ தவம். அம் முயற்சிக்குரிய சாதனமல்லவா மழித்தலும், நீட்டலும். அங்ஙனமிருக்க உலகு பழிப்பதை ஒழிக்க விருப்பமேயின்றி அதனைச் செய்வதையே இலட்சியமாகக் கொண்டு சாதனங்களை மேற்கொண்டவர்களைப் பார்த்து திருவள்ளுவர் கூறுவது உலகு பழிப்பதை செய்து கொள்வதற்குரிய சாதனம் அல்ல தவ வேடம்.

உலகு பழித்ததை ஒழித்துவிடின் சாதனமே வேண்டாம் என்ற குறிப்பிலேயே திருவள்ளுவர் பேசுகின்றார்.

உலகம் பழித்ததை ஒழித்துவிடின் மழித்தலும், நீட்டலும் வேண்டா என்பதே திருவள்ளுவரின் தெளிவான கருத்து.