குறட்செல்வம்/உண்மைக் குடிமக்கள் யார்?

விக்கிமூலம் இலிருந்து

18. உண்மைக் குடிமக்கள் யார்?


மனித சமுதாய அமைப்பின் வழியிலேயேதான் நகர, நாட்டு அமைப்புகள் தோன்றுகின்றன. மனித சமுதாயம் நாடுகளை உருவாக்குகின்றது. காலப்போக்கில், நாட்டின் வழி மனித சமுதாயம் பெருமை பெறுகிறது. புகழ் பெறுகிறது. இந்த உணர்ச்சி வடிவத்தில் வோன்றுவது தான் தாய் நாட்டுப் பற்று.

ஒரு நாட்டின் குடியுரிமை பெற்று வாழுதல், மனிதனின் விழுமிய சிறப்புகளுள் ஒன்று. உலகில் பல்வேறு பகுதிகளில் குடியுரிமை பெறாத மக்கள் நாடற்றோர் என வாழ்கின்றார்கள். அது பீடன்று. மேலும் நிரந்தரமான நல்வாழ்வுக்கும் உத்தரவாதமில்லை.

ஒரு நாட்டின் சட்டபூர்வமான குடியுரிமை பெற்றால் மட்டும் போதாது. அந் நாட்டு மக்களின் மொத்த நலனை எண்ணத்திற் கொண்டு ஒழுகுகின்றவர்களாகவும் இருக்க வேண்டும். தனிமனித ஒழுக்கங்களைப்போல, நாட்டு ஒழுக்கங்கள் என்று சில இருக்கும். அவ்வொழுக்கங்களை மேற்கொண்டு ஒழுகுகின்றவர்களே உண்மையான குடிமக்கள்.

ஒரு நாட்டில் பிறந்து விட்டதனாலோ அல்லது மக்கள் தொகைக் கணக்கெடுப்பவர்கள் கணக்கில் சேர்த்து கொண்டமையினாலோ ஒருவர் ஒரு நாட்டின் உண்மையான குடிமகனாகி விடுவதில்லை.

முடியாட்சி நிலவிய காலத்தில் தோன்றிய திருக்குறள் சிறந்த குடிமக்கள் ஆட்சியைப் பற்றியும் கூறுகிறது. திருவள்ளுவர், நாட்டு ஒழுக்கம் பற்றி, நகைச்சுவை ததும்பப் பேசுகின்றார்; மக்கட் கணக்கு எழுதி வைக்கும். அலுவலர், மக்கள் வரிசையில் ஒருவர் பெயரை எழுதி வைத்திருந்தார்.

ஆனால், அவரிடத்திலோ, சமுதாய ஒழுக்கம், தாட்டு ஒழுக்கம் என்பது சிறிதளவும் இல்லை. அவர் சாதிப் பகையை வளர்ப்பார். ஒன்றுபட்டு வாழ்தலுக்கு உலை வைப்பார். பிறர் கருத்தை அறிய மறுப்பார். தன் கருத்தையே சாதிப்பார். எல்லாரும் எல்லா நலன்களும் பெற்று வாழ்கின்ற சமநிலைச் சமுதாயத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார். தன் லாபம் ஒன்றையே கருதுவார்.

சமுதாய பகை ஒழுக்கக் கேடுகளாகிய அழுக்காறு, வெஃகுதல், வெகுளி, புறங்கூறல், கலகம் செய்தல் ஆகியவற்றையே மேற்கொண்டு ஒழுகுவார். சமுதாய ஒழுக்கத்தை, கட்டிக் காக்கின்ற அன்புடைமை, பொறையுடைமை, ஒப்புரவறிதல் ஆகிய இனிய ஒழுக்க நெறிகள் அவர் அறியாதன. இப்படிப்பட்ட ஒருவர் பெயர், மக்கள் கணக்கில் இருக்கிறது.

திருவள்ளுவர் சொல்கிறார். மக்கள் கணக்கிலிருந்து அவர் பெயரை நீக்கிவிடும்படி. நீக்கிவிடுவது மட்டுமின்றி, இழிந்த உயிர்வர்க்கங்களுக்கு ஏதாவது கணக்கிருந்தால், சேர்த்துக்கொள்ளும்படியும் சொல்லுகின்றார்.

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.

குடிமைப் பண்பை எவ்வளவு அழகாகத் திருவள்ளுவர் விளக்குகிறார். பரந்த பாரதநாட்டு மக்களிடத்தில், சிறந்த குடிமக்கள் இயல்பு வளர்ந்து நாட்டு ஒழுக்கம் சிறந்து வளர வேண்டும். பாரததாட்டில் நாட்டு ஒழுக்கமாகச் சிலவற்றை நாம் நியதி செய்துகொண்டு அந்நெறியில் ஒழுக வேண்டும்.

பாரத நாடு மிகப் பெரிய நாடு. பல்வேறு மக்கள் வாழும் பெரிய நாடு. பல்வேறு சமய நெறிகளைக்கொண்டு ஒழுகுகிற நாடு. எனினும் மொழி, சமய வேற்றுமைகளைக் கடந்த ஓர் உணர்ச்சி பூர்வமான ஒருமைப்பாட்டைக் கொள்வது, நமது நாட்டொழுக்கங்களில் ஒன்று.

இரண்டாவதாக நாம் அனைவரும் விரும்பி, ஒரு பரிபூரண மக்களாட்சி முறையை ஏற்றுக் கொண்டிருக்கின்றோம். மக்களாட்சி முறைப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் சிந்திக்கவும், கருதவும் உரிமை உண்டு. அவ்வழி அஃதானது, கருத்து வேறுபாடுகளின் காரணமாகக் காழ்ப்பும், பகையும் காட்டுதல் கூடாது. அவ்வழி, கலகங்களும் தோன்றக் கூடாது.

மக்களாட்சி முறை நிலவும் நாட்டில் நல்ல கருத்து மாற்றம், மனமாற்ற முயற்சிகள் நடைபெற வேண்டுமே ஒழிய, பகைவழி முயற்சிகள் கூடாது.

மூன்றாவதாக, இந் நாடு கூட்டுக் குடும்ப அமைப்புடையது. இந்நாட்டின் உடைமைகள் அனைவர்க்கும் பொதுவுடைமை. இந் நாட்டின் செல்வ வாழ்வு சமநிலை உடையதாக இருக்க வேண்டும். எல்லாரும் எல்லா நலன்களும் பெற்று வாழும் சமநிலைச் சமுதாய அமைப்பை நாம் விரும்பி மேற்கொள்ள வேண்டும்.

இந்த மூன்று தலையாய ஒழுக்கங்களும் இன்றைய பாரத நாட்டின் நாட்டொழுக்கங்கள். இவ்வொழுக்கங்களை மனப்பூர்வமாக ஏற்று ஒழுகுபவர்களே,திருவள்ளுவர் கருத்துப்படி, இந்நாட்டின் உண்மையான குடிமக்கள் ஆவார்கள்.