குறட்செல்வம்/நிலத்தியல்பு

விக்கிமூலம் இலிருந்து

19. நிலத்தியல்பு


திருக்குறள் ஒரு வாழ்க்கை நூல். கனவிலும், கற்பனையிலும் திளைக்கும் வாழ்க்கைப் போக்கைத் திருக்குறள் ஒதுக்கித் தள்ளுகிறது. மேலும், திருக்குறள் உணர்ச்சியைத் தொடுகின்றது — தூண்டுகிறது — துண்டி வளர்க்கிறது.

எனினும், உணர்ச்சிகளால் மட்டும் நடத்தப் பெறும் வாழ்க்கை இயலை—வாழ்க்கைப் போக்கைத் திருக்குறள் மறுக்கிறது. இன்ப வேட்கை கொண்டு நடத்துகிற வாழ்க்கையைவிட, துன்பங்களால் தொடரப்பெற்ற வாழ்க்கையாயினும் நெறிமுறைப் பட்டதாக-வளர்ச்சியுடையதாக அமைவதே சிறந்தது என்பது திருவள்ளுவர் கருத்து.

திருக்குறள் காட்டும் ஒழுக்க நெறிகள் எளியன போலத் தோன்றும். ஆனாலும், உணர்ச்சி வசப்பட்ட மக்களுக்கு அவை அரியவாம். அறிவும் தெளிவும் கொண்ட மனிதர்களுக்குத் திருக்குறள் காட்டும் ஒழுக்க நெறிகள் எளியன, இனியன. திருக்குறள் பொறையுடைமைப் பண்பை மிகுதியும் வற்புறுத்துகின்றது.

பொறையுடைமைப் பண்புக்கு திருக்குறள் கூறும் உவமை நிலம். நிலம் கொடிய கருவிகளால் தன்னை கொத்திக் கிளறி, கொடுந்துன்பம் இழைப்பாரையும் வீழ்த்தாமல் தாங்குகிறது. தனது மாசற்ற மேனியில், மாசுகளை உண்டாக்கினாலும் பொறுத்தருளி அவர்கட்கும் வாழ்வு தருகிறது. பொறுப்பதோடு மட்டுமன்றி, அத்துன்பங்களையே தன்னுடைய செழிப்புக்கு உரியவைகளாக மாற்றிக்கொண்டு தன் பெருமையை உயர்த்தி வளம் பெருக்கித் தீங்கிழைத்தோருக்கும் உண்ண உணவும் பருக நீரும், தந்து வாழ்விக்கிறது.

ஆக, தீங்கு செய்தோசைப் பொறுத்தல், அத் தீங்குகளையே தன்னுடைய வளர்ச்சியின் நிலைக்களன்களாக மாற்றிக்கொண்டு வளர்தல், பொறுத்தலினும் மிஞ்சிய வாழ்விக்கும் பணியினைச் செய்தல் ஆகியவற்றால் நிலத்தின் பெருமை உயர்கிறது.

அதுபோலவே, தீங்கு செய்வோரை எதிர்த்து அழித்தல் நலமன்று. அங்ஙனம் அழித்தால், தீங்கு செய்யப்பட்டார் மட்டும் அழிவதில்லை. தீங்கு செய்தாரின் நல்லியல்பும் கெட்டு—காலப்போக்கில் அவர்தம் செங்குருதி முறிந்து அழிவையும் அனைத்துக் கொள்ள நேரும்.

உலகியல் பரிணாம தத்துவப்படி, ஒன்றிலிருந்து பிறிதோன்று தோன்றாது. அழிவிலிருந்து அன்பு தோன்ற முடியாது—ஆக்கம் தோன்ற முடியாது. அழிவிலிருந்து அழிவே தோன்றும்.

பகைவரை ஒறுக்கத் தோன்றும் பகையுணர்ச்சி நம்மையும் அழித்தொழிக்கும். அதனாலன்றோ, புராணங்களிலும்கூட அசுரர்களின் அழிவு பேசப்படவில்லை. அவர்களின் மனமாற்றமே பேசப்படுகிறது.

பகைவர் நமக்குச் செய்யும் தீங்குகளால் நாம் அழிகிறோம் என்பது உண்மையன்று. தம்முடைய குறைகள் மிகுந்திருக்குமானால் பகைவர்களுக்கு இடமேற்படும். இதற்கு மாறாக அவர்களால் நமக்கு விளையும் துன்பங்களையும் தொல்லைகளையுமே வாயில்களாகக் கொண்டு, புது அறிவும் புது முயற்சியும் செய்வோமாயின் கிளறிய நிலத்தில் பயிர் விளைவது போல நாமும் அறிவால் — ஆற்றலால் செழித்து வளர முடியும்.

நம்முடைய வளர்ச்சி மிகுகின்றபோது, பகைவர்களும் பகையாற்றல் ஒடுங்கி நம் நிழலில் வாழ முற்படுவர். நாமும் வாழ்வளிக்க முடியும்.

பழிவாங்குதல், பழியினைச் சுமத்தும் — புகழைக் கெடுக்கும். பொறுத்தல் புகழைத் தரும் — புதுமை நிறைந்த — பொலிவுடைய எதிர்காலத்தை உருவாக்கும். திருக்குறளைப் படித்து, சிந்தனைசெய்து வாழ்க்கையோடு இணைத்து, செயல்படுத்த முயல்வோமாக!

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்.