குறட்செல்வம்/உயிர் வாழ்வான் யார்?

விக்கிமூலம் இலிருந்து

26. உயிர் வாழ்வான் யார்?


திருக்குறள் ஒரு சமுதாய ஒழுக்க அமைப்பு நூல். மனிதர்கள் தம்முள் கூடிவாழக் கடமைப்பட்டவர்கள். அதுவே, மனித நாகரிகத்தின் விழுமிய சிறப்பு. ‘மனிதன் ஒரு சமூகப் பிராணி’ என்றார் ஓர் ஆங்கிலப் பெரும்புலவர். விலங்குகளில் கூட்டு வாழ்க்கை இல்லை. ஒரோ வழி சில விலங்கினங்களிடத்தே கூட்டு வாழ்க்கைமுறை இருந்தாலும்கூட அது அச்சத்தின்பாற் பட்டதேயொழிய, அன்பின்பாற் பட்டதன்று.

சமுதாயக் கூட்டு வாழ்க்கையை வளர்ப்பதென்பது மிக நுண்ணிய ஆற்றல். தம் இச்சைவழிச் செல்லும் பொறிகளின்மீது தனியரசு செலுத்துவோரே பொதுவாழ்விலும் கூட்டுப் பொதுவாழ்க்கையைத் திறமையாக நடத்த முடியும். சமுதாயக் கூட்டு வாழ்க்கைக்கு உரிய சிறந்த பண்புகளில் ஒன்று ஒப்புரவு அறிதல்.

ஒப்புரவறிதல் அதிகாரத்தில் வரும் குறட்பாக்களுக்கு உரையாசிரியர்கள் பெரும்பாலும் ‘இல்லாதவர்களுக்குக் கொடுத்தல் — உதவி செய்தல்’ என்ற தன்மையிலேயே பொருள் கண்டுள்ளனர். இல்லாதவர்களுக்குக் கொடுக்கும் பண்பை — இயல்பை, ஈகை என்ற தனி அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுகின்றார்.

ஈகை, ஒப்புரவறிதல் இவ்விரண்டும் ஒன்றுபோலத் தோற்றமளித்தாலும் ஆழமான கருத்து வேறுபாடு உடையன. ஈகை வழிப்பட்ட சமுதாயத்தில், உடையோர் —இல்லோர் என்ற வேற்றுமை விரிந்திருக்கும். அவ்வழிப் புகழ்ச்சியும் இகழ்ச்சியும் தலைதுாக்கி நிற்கும். ஒப்புரவு, அறிதலில் உடையோர் இல்லோர் வேற்றுமையின்றி, உயர்வு தாழ்வு இன்றிக் கொடுத்தல் கடமை எனவும், கொள்ளல் உரிமை எனவும் கருதும் அடிப்படையிலேயே அந்த அதிகாரம் அமைந்துள்ளது.

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.

என்பது திருக்குறள். இங்கு ஒத்தது என்ற சொல்லுக்கு வழக்கம்போல பரிமேலழகர் 'உலக நடையினை' என்று எழுதித் தப்பித்துக்கொண்டு விட்டார். அது நிறைவான கருத்தன்று. 'தன்னைப்போல் பிறரை நினை' என்பது ஒரு விழுமிய ஒழுக்க நெறிவாக்கு.

இன்றையச் சமுதாயத்தில் பலர் தம்மோடு பிறர் ஒத்துவர வேண்டும் என்று விரும்புகிறார்களே தவிர பிறரோடு தாம் ஒத்துப்போக வேண்டும் என்று கருதவில்லை.

பலருக்கு எது ஒத்ததோ அதற்கு சிலர் இணங்கியே வாழவேண்டும். அதுவே சமுதாய நியதி — ஒழுக்கம். அங்ஙனம் உணர்ந்து வாழ்பவர்களே வாழ்பவர்கள். அவர்கள் வாழ்க்கையிலேயே இன்பமும் அமைதியும் இருக்கும். மற்றோர்க்கும் அவர்தம் வாழ்க்கையால் பயனுண்டு.

இங்ஙனம், ஒத்தறிந்து ஒழுகத் தெரியாதவர்கள் வாழ்ந்தாலும் நடமாடினாலும் பிணம் என்றே கருத வேண்டும் என்று திருக்குறள் கூறுகிறது. காரணம், பிணத்திற்கு மனித உருவ அமைப்பு இருந்தாலும் உணர்ச்சியில்லை. உதவும் பணியில்லை. அதுபோலவே, ஒத்ததறிந்து வாழும் இயல்பில்லாதவர்களுக்கும் அன்பு, சமுதாயம் ஆகிய உணர்ச்சிகள் இல்லை. அவர்களும் உதவ மாட்டார்கள்.

பிணத்தை நடுவீட்டில் நடுத்தெருவில் பல நாட்கள் வைப்பதரிது. காரணம் நாற்றமெடுக்கும். காற்றைக் கெடுக்கும். சமுதாயத்திற்கு நோய் தரும். அதுபோலவே, ஒத்ததறிந்து உதவி வாழமுடியாத மனிதன் நெஞ்சத்தால் நாற்றமெடுத்தவனாவான். பிணம்போல் நாறுவான்.

நாற்றத்தைத் தன்னுடைய சொற்களாலும் செயல்களாலும் வெளிப்படுத்துவான். உபத்திரவம் செய்வான். பிணத்தை வீட்டிலிருந்து விரைவாக எடுத்துச் செல்வது போல், சமுதாயத்திலிருந்து இந்த மனிதர்களையும் விரைவில் எடுத்தாக வேண்டும்.

ஒத்தது அறிவான் என்று சொன்னமையால் தானே வலிய முயன்று அறிந்து செய்தலையே திருவள்ளுவர் இங்கு குறிப்பிடுகின்றார். இதையே (volunteer Service) என்று குறிப்பிடுகிறார்கள். குறட்பாவைப் பாருங்கள்.

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.