குறட்செல்வம்/தீயும் தீவினையும்

விக்கிமூலம் இலிருந்து


25. தீயும் தீவினையும்


தற்காத்துக் கொள்ளுதல் என்பது இயல்பான உயிரியல் உணர்வு. உயிர்வர்க்கம் எல்லாமே தம்மைத் துன்பத்தினின்றும் மரணத்தினின்றும் காப்பாற்றிக் கொள்ளவே விரும்புகின்றன — முயற்சி செய்கின்றன.

விலங்கியலில் உயிர் அறிவும் உணர்வும் மிகமிகக் குறைவு. மனித இயலிலும் உடலியலை விட உயிர் உணர்வும் அறிவுமே மிகுந்து காணப் பெறுகின்றன. அது இயற்கை பரிணாம வளர்ச்சியிலும் கூட இதுவே நியதி.

விலங்குகள் உடல் தற்காப்பிலேயே ஈடுபடும். உயிரியல் அறிவு கைவரப்பெற்றமையின் காரணமாக மனிதன் ஆன்மாவையும் தற்காத்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறான். அதனாலேயே விதித்தன செய்தலும், விலக்கியன ஒழித்தலும், விருப்பம், சிந்தனை ஆகியவற்றோடு தொடர்பு படுத்தி வற்புறுத்தப் பெற்றன. 'தீவினை அச்சம்' என்றே திருக்குறள் அதிகார வைப்பு ஒதுகின்றது.

தீவினை செய்தலில் அச்சமல்ல — தீவினை பற்றிய அளவிலேயே அச்சம்! பெருவெள்ளத்தைக் கண்டு விலகி ஓடுதல் போன்றது. தீவினையுணர்வுகளினின்றும் அஞ்சி, ஒதுங்கிக் கொள்ளுதல் தனக்குத்தான் உண்மையான அறிவொடுபட்ட விருப்பம் இருக்குமாயின் அவன் பிறருக்கு யாதொரு தீங்கும் — சிறியதேயாயினும் செய்யற்க என்று திருவள்ளுவர் வற்புறுத்துகின்றார்.

தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.

என்பது திருவள்ளுவர் அருள்வாக்கு.

பிறருக்குத் தீங்கு செய்யும்போது — பிறருக்குத் துன்பம் உண்டாக்குவது போலத் தோன்றினாலும், அது பயன்விளையுங் காலத்துத் துன்பம் செய்தாருக்கும் துன்பம் தருதலின் தற்காத்துக் கொள்க என்ற கருத்து இங்கு பெறப்படுகிறது.

நாம் பிறிதொருவருக்குத் தீங்கு செய்யத் திட்டம் தீட்டலாம் — பேசலாம் — திட்டபடி செய்யலாம். நம்மால் துன்பம் இழைக்கப் பெறுகிறவன் நம்முடைய துன்பத்தை அனுபவிக்கவும் செய்யலாம். அவன் திரும்பித் தீங்கு செய்யத் தெரியாதவனாக இருக்கலாம். செய்வதற்குரிய ஆற்றல் அற்றவனாகக்கூட இருக்கலாம்.

ஆனாலும் அறக்கடவுள் தீங்கு செய்தார்க்குத் தீங்கு செய்யத் திட்டமிடும்—சூழ்ந்து செய்யும் துன்பப்பட்டவன், பொறுப்பை அறக்கடவுள் எடுத்துக் கொள்ளும். பிறருக்குத் துன்பம் விளைவிக்காமல் — ஆனால், பிறர் இழைக்கும் துன்பத்தால் அவதியுறுபவன் கேடும் இழப்பும் இல்லாமலேயே நலம் பெறுகிறான். காரணம், அறக்கடவுள் அவனுக்குப் பாதுகாப்பாக இயங்குகிறது. அறக் கடவுளின் ஆற்றல் அளப்பரிது. ஆதலால், தீங்கிழைத்தவனை, அது துன்புறுத்தியே தீரும். இதனை,

மறந்தும் பிறன்கேடு சூழற்க, சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.

என்று திருக்குறள் வலியுறுத்துகிறது. இனி, பிறருக்குத் தீமை செய்ய நினைக்கின்ற அளவிலேயே நினைக்கின்றவன் தீமையுறுகின்றான் என்பது சான்றோரின் அனுபவ உரை. “தீங்கு நினைக்கின்றவனுக்கே தீங்கு”. ‘Evil to him who evil thinks’. என்பது ஆங்கிலப் பழமொழி. தனக்குத் தீங்கு நேராமல் இன்னொருவனுக்குத் தீங்கு செய்ய முடியாது என்று ஒர் அனுபவ உரையுண்டு.

திருவள்ளுவர், தீமையையும் தீயையும் ஒப்புநோக்கி தீச் செயலின் இழிநிலையை - அதன் கொடுமையை நமக்கு உணர்த்துகின்றார். தீ, வைத்த இடத்தில் மட்டுமே எரியும். தீ, வைக்கின்றவனின் கை, பற்றி எரிவதில்லை. தீ, வைக்கப்பெற்ற கூரை மட்டுமே பற்றி எரியும். இது ஒருபால் கேடு.

அது மட்டுமின்றி தீயினை யார் வைத்தாலும் வைத்தவர்களே அணைக்க வேண்டுமென்ற அவசியமில்லாமல் மற்றவரும் அணைக்கலாம். ஏன்? இன்று தீயனைக்கும் படையே இருக்கிறது. ஆனால் ஒருவரிடம் உள்ள தீமையைப் பிறிதொருவர் தணிக்க முடிவதில்லை. ஆனால், முயலலாம். அந்த முயற்சி தூண்டுதலும் வழி நடத்தலும் என்ற அளவிலேயே அமையும். தீமையுடையவர் உணர்வசைந்து உடன்பட்டாலேயே மாறுதல் உண்டு. அப்படியில்லையேல், ஒருவரிடமுள்ள தீமை தணிவதில்லை.

இந்தத் சிறந்த நோக்கந்தான் தன்னிடமுள்ள தீமையை, தானே உணர்ந்து நொந்து, வருந்தி அழுது வாடி, தீமையிலிருந்து விடுதலைபெற, சான்றோர்கள் முயன்றிருக்கிறார்கள். இந்த, சிறந்த நோக்கத்துடனேயே சமயங்களில் பிரார்த்தனையும், வழிபாட்டு முறைகளும் தோன்றின. உண்மையான பிரார்த்தனை என்பது ஒருயிர் தன்னையே நோக்கித் தன் தீமை கருதி, அழுது, தன் கண்ணீரால், தன்னுடைய தீமையைக் கழுவுதலேயாம்.

ஆனால், மனிதனின் வியாபாரப் புத்தியும், சோம்பலும் இந்தக் தூய சமயத்தையும் விட்டபாடில்லை. இதன் விளைவகாவே புரோகித சமயம் தோன்றிற்று. ஒருவருக்காகப் பிறிதொருவர் அழத் தொடங்கிவிட்டனர். பாபர் போல அழுதால் பயனிருக்கலாம். அது உண்மையிலேயே அழுறது. ஆனால், இவர்கள் அழுவதோ பெறக்கூடிய காசுகளுக்கேயாம். காலப் போக்கில் அழுவதுகூட விடுபட்டுப் போயிற்று. அவர்கள் சமயத்தின் முதலாளிகளாகி விட்டார்கள்.

முழுநிலவை மறைத்த நிழலைக் கருதி முதலைக் கண்ணீர் வடித்துக் குளத்தில் மூழ்கும் மனிதர்கள்—நிறைவுடைய நன்னெறியாம் சமயத்தில் படிந்த தீமையை நினைத்து அழாதது. ஏனோ? ஒருவனிடமுள்ள தீமையை அவனே உணர்ந்துதான் மாற்றிக்கொள்ள முடியும். பிறர் அணைக்கும் தீயைவிட தம்மிடமே உள்ள பொறுப்பான தீமை கொஞ்சம் சிக்கலானதேயாம்.

அதோடு, தீ எரியத் தொடங்கியவுடனேயே வெளிப் படையாகத் தெரிகிறது. ஆதலால், உடனடியாக அணைக்கும் முயற்சியும் தோன்றிவிடுகிறது. ஆனால், தீமையோ உடனடியாகத் தெரிவதில்லை. உடனிருந்தும் ஒட்டியும், பச்சை உறவு காட்டியும் இன்ப நயங் காட்டியும் பையப்பைய அரித்துக் கெடுப்பது.

பலர், தன்னிடமுள்ள தீமையையேகூட அறியாமையின் காரணமாக நன்றென்றே கருதிக் கொண்டிருக்கிறார்கள். அல்லது “அவரிடமில்லையா? இவரிடமில்லையா? அதற்கு இது என்ன மோசம் போய்விட்டது?” என்று சமாதானம் கற்பித்துக் கொள்கிறார்கள். பலரிடம் வறுமை இருப்பதனால், வறுமையை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறார்களோ? சிலரிடமுள்ள செல்வத்தில்தானே நாட்டம் வைக்கிறார்கள்! ஆதலால் வெளிப்பட இருந்து காட்டி, சீக்கிரத்தில் அணைக்கப் பெறும் தீயைவிட உள்ளிருந்து எரித்து அழிக்கும் தீமை மிகவும் கொடியது.

தீயினால் எரிவது வீடுகளேயாம். வீடுகள் மனிதனின் படைப்புகள். ஆனால் தீமையினால் அழிவதோ மனிதனே யாம். படைப்புப் பொருள்கள் அழிந்தால் திரும்பப் படைக்கலாம். படைப்புக்குரிய மனிதனே அழிந்து போனால்...... இந்த வகையிலும் தீமை மிக கொடியது.

தீயினால் விளையும் தீது ஒரே வழி எல்லைக்குட்பட்டதன்று. நில எல்லைக்கும் உட்பட்டதன்று. கால எல்லைக்கும் உட்பட்டதன்று. தீமை மனித சமுதாயத்தையே அழிக்க வல்லது. ஏழேழ் தலைமுறைக்கும் அழிக்க வல்லது இந்த வகையிலும் தீயினும் தீமை கொடியது.

தீ, கூரையிலிருந்தால்கேடு. ஆனால், அடுப்பிலிருந்தால் ஆக்கம். அணையா அடுப்பு வளம் நிறைந்த மனையின் சிறப்பு. ஆதலால், அடுப்பிலிருக்க வேண்டும். ஆனால், தீமையினால் ஒரு வழியிலும் பயனில்லை. எந்த அளவிலும் பயன் தராது. பயன் தருவதுபோலத் தோற்றமளித்தாலும் சர்க்கரைப்பாகு தடவிய நஞ்சுருண்டையே யாம்.

நாவில் கரும்பின் இனிமை தென்படும். உடனேயே உயிர் கொல்லும் நஞ்சும் தென்படும். தீமையினால் வரும் பயன் கள்ளுண்டு களித்தல், வரைவின் மகளிர் மயக்கு—எல்லாவற்றையும்விடப் பிணந்தழுவிய முயக்கு ஆகியன போலாம். ஆக ஒருபோதும் பயன்படாது. ஆதலால், தீயைவிடத் தீமை கொடியது. அதனாலன்றோ திருவள்ளுவர்,

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.

என்று குறிப்பிடுகின்றார். தீயவை தீய பயத்தலால் என்ற சொற்றொடரும், தீயினும் என்பதிலுள்ள் உம்மையும் அறிவுக்கு விருந்து. ஆழச் சிந்திப்பாரின் அக உலகிற்குப் பாதுகாப்பு.

தீமை செய்வோர் தீமை செய்யட்டும், செய்து கொண்டே இருக்கட்டும். அதனால் நாய்கள் தாம் கக்கியவற்றைத் தாமே தின்பது போலத் தம்முடைய செயல்களின் விளைவுகளை, அவர்களே அனுபவிப்பார்கள். அறக்கடவுள் சூழ்ந்து ஊட்டுவிக்கும்.

ஆதலால், அச்சமின்மை பேசிய திருவள்ளுவர் அஞ்சச் சொல்லுகிறார். தீயனவற்றிற்கு அஞ்சச் சொல்கிறார். புறத்தில் தாக்கும் தீமைகளைக் கண்டு அஞ்சுவது போலவே. ஏன்? அதனினும் ஒருபடி மேலாக அகத்தில் தோன்றித் தாக்கும் தீமையைக் கண்டு அஞ்சச் சொல்கிறார். மடியில் தீயினைக் கட்டிக்கொண்டு, நானிலத்தில் நடப்பாரில்லை. அதுபோல் மனத்தில் தீமை தாங்கி நடப்பாருமில்லை என்கிற நிலை உருவாக வேண்டும். அதுவே வள்ளுவர் விரும்பும் உலகம்.