குறட்செல்வம்/வித்துமிடல் வேண்டுமோ?

விக்கிமூலம் இலிருந்து

12. வித்துமிடல் வேண்டுமோ?


தமிழர் நாகரிகத்தின் மிகச் சிறந்த ஒழுக்கம் விருந்தோம்புதல். உண்பதன்முன், தன் வீட்டு முகப்பில் உணவு அருந்த வேண்டியவர்கள் யாரேனும் உள்ளனரோ என்று பார்த்து, அவ்வாறு, எவரேனும் இருந்தால் அவர்களை அழைத்து உண்பித்துப் பின்னர், தாம் உண்பதென்பது தமிழர்களின் விழுமிய ஒழுக்கம். விருந்தினர்கள் சுதந்திரமாக—உரிமையுடன் வந்து தங்குவதற்கு திண்ணைகள் அமைத்து வீடு கட்டுவது நமது மரபு.

திருமூலர் திருமந்திரம்,

“யாவர்க்கு மாம் உண்னும் போதொரு கைப்பிடி”

என்று வரையறுத்து ஒதுகிறது.

விருந்தோம்பும் சால்பினர் வாழும் ஊரில் அடிக்கடி அயலூர்ச் சான்றோர் வருவர். அவ்வழிச் சிறந்த அறிஞர்கள், புலவர்கள், முனிவர்கள் ஆகியோருடைய உறவும் உள்ளக் கருத்தும் எளிதில் சமுதாயத்திற்குக் கிடைக்கும். வந்தோரை உண்பித்தலின் காரணமாக அவ்வூரின் புகழும் பரவும்.

இத்தகு சிறப்புக்களுக்குக் காரணமாகத் திகழ்கின்ற நல்லோரின் கழனிகள் நல்லோரின் உடைமைகள் உரிமையால், ஒருவரின் உடைமைகளாக இருப்பினும், அதன் விளைவுகள் பலருக்கும் பயன்படுவதன் காரணமாக உரிமையானரைவிட ஊரினரே அவர்தம் உடைமைகளைக் காப்பாற்றுவதில் அக்கறை காட்டுவார்கள். அவர்களே விருந்தோம்பி வேளாண்மை செய்வோரின் நிலங்களை வளப்படுத்துவதோடு மட்டுமின்றி, விதைகளும் தூவுவார்கள். அங்கே, உடைமை உரிமை, உணர்வு—இன்மையுணர்வு இரண்டுக்கும் மோதல் ஏற்படாது. துன்பம் ஏற்படாமல் ஒரு சிறந்த சமுதாய அமைப்பே கால் கொள்ளுகிறது. அதனாலேயே திருவள்ளுவர்,

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.

என்று கேட்கின்றார். இக் கருத்தினில் நம்பிக்கையில்லாதோர் சில பேர் இது பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதாகக் கருதினார்கள்.

பாவேந்தர் பாரதிதாசன்கூட இதில் நம்பிக்கை யில்லாமல், "மிடல்" என்பதனை வேலி என்று பொருள் கொண்டு வேலியிட வேண்டுமோ? என்று பொருள் கண்டிருக்கிறார். அதிலும் அவர் ஊரின் நல்லெண்ணத்தில் துளியும் ஐயப்படவில்லை. அத்தகைய பண்பாடுடையவர்களின் நிலத்துக்கு வேலியடைக்க வேண்டியதில்லை—ஊரே காப்பாற்றும் என்று கூறுகிறார். அவர் அத்தகு கருத்துக் கொண்டதற்குக் காரணம், நிலம் விதை போடாமலேயே விளையும் என்று வள்ளுவர் சொல்லியிருப்பதாகக் கருதியதே போலும்!

திருவள்ளுவர் அப்படிச் சொல்லவில்லை. நிலத்தை உடையவர்கள் விதை பாவவேண்டுமோ என்ற குறிப்பிலேயே திருவள்ளுவர் பேசுகிறார் என்று கருதுவதில் தவறில்லை.