பக்கம்:அஞ்சலி.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150 லா. ச. ராமாமிருதம்

அவ்வுயிரின் உரு தன்னிரு பக்கங்களிலும் இரு வளைவுகளைக் கற்பித்து விரித்துக்கொண்டு கிளம்புகையில், ஒரு பட்சியின் வடிவமாய் அந்தரத்தில் பிதுங்கியது. கீழே உதைத்துக்கொண்டு அது அப்படிக் கிளம்பிய வேகமும் அழகும் என்னுடல் புல்லரித்தது. அதை எதிர்த்துக் கொண்டு என் நெஞ்சம் நெஞ்சுக்குழிவரை எழும்பித் “தடால்” எனத் தன்னிடத்தில் வீழ்ந்தது.

ஏதோ இவ்வுலகத்தையே, கோளத்தையே கழற்றி எறிவதுபோல் ஒரே வளைவில் அது எழும்பிய வேகத்தில், நீல மெத்தையில் வைர நகை உருண்டாற்போல், அதன் வெண்மை வானில் ஜ்வலித்தது. நான் பரவசமானேன். என் கைகள் என்னையறியாமல் வானை ஆலிங்கனம் செய்ய விரிந்தன.

“என்ன செய்யப் பாக்கறேள்?”

நட்சத்திரங்கள் சொரிந்தாற் போன்ற சிரிப்பு. திரும்பினேன். இரு தோள்களிலும் இரண்டு பின்னல்களைத் தொங்கவிட்டுக் கொண்டு யோக வேஷ்டிமாதிரி ஒரு பையை மாட்டிக்கொண்டு ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள். அவள் சிரிப்பில் அவள் மூக்குத்தண்டு புருவ மத்தியில் சுருங்கிற்று. அவளை யாரென்று நான் அறியேன். என் உடலின் பரபரப்பில் எனக்கு அப்பறவையின் லாகவம் தவிர வேறேதும் புரியவில்லை.

“பார் பார், அதோ பார், வானத்தில் வைரப்பிடி போட்ட கத்தி மின்னுகிறது பார்!”

ஒரு கையைப் புருவங்களுக்குமேல் நிழலுக்கு வைத்துக் கொண்டு அவள் அண்ணாந்து நோக்கினாள். மொக்கவிழ்ந்தாற்போல் அவள் வாய் சற்றுத் திறந்தது.

ஆனால், நாங்கள் அதைக்கண்டு அதிசயித்து கொண்டிருக்கையிலேயே திடீரென அது கதிகலைந்து நிலை தவறியது. அதன் இறக்கைகள் செயலிழந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/160&oldid=1025817" இலிருந்து மீள்விக்கப்பட்டது