பக்கம்:அனிச்ச மலர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

அனிச்ச மலர்

கடைக்குப் போய்விட்டு வந்தால்தான் காரியம் முடியும் என்று தோன்றியது அவளுக்கு.

திடீரென்று தன் கழுத்தில் சங்கிலியையோ, கைகளில் வளைகளையோ காணாவிட்டால் சக மாணவிகளில் யாராவது அவைகளைப்பற்றி விசாரிப்பார்களே என்றும் தயக்கமாயிருந்தது.

அன்று வகுப்புகளுக்குக்கூட அவள் செல்லவில்லை. 'தலைவலி என்று தோழிகளிடம் சொல்லி அனுப்பிவிட்டாள். வகுப்பு, கல்லூரி, பாடம், படிப்பு எதுவுமே அவள் நினைவில் அப்போது இல்லை. எப்படியாவது எங்கேயிருந்தாவது தொடங்கி சினிமா ஸ்டாராகிவிட வேண்டும் என்ற வெறிதான் மூண்டிருந்தது. எல்லாப் பத்திரிகைகளிலும், தெருச்சுவர்களிலும் தன் உருவத்தைக் காணப்போகிற எதிர்காலம் பற்றி அவள் இப்போதே கனவுகளில் மிதக்கத் தொடங்கியிருந்தாள்.

தான் மார்வாடிக் கடையில் போய் அடகு வைத்துப் பணம் வாங்கி அது பிரின்ஸிபால் அம்மாளுக்கோவார்டனுக்கோ தெரியவந்தால் தன்னைக் கல்லூரியிலிருந்தே நீக்கிவிடுவார்களோ என்றும் பயமாக இருந்தது. இறுதியில் பயம், தயக்கம், கூச்சம் எல்லாவற்றையும் ஆசை வெற்றிகொண்டது. எப்படியாவது பணத்தைப் பெற்று எம்.ஓ. செய்து விண்ணப்பத்தாளுடன் இணைத்து அனுப்புவது என்று முடிவு செய்துவிட்டாள் அவள். கடைசியாக மார்வாடிக் கடைக்குப் போவதைத் தவிரவும் இன்னொரு வழி மீதமிருப்பது தெரிந்தது. முன் பொரு நாள் மேரி தன்னைத் தேடிவந்து கூறிய விஷயம் சுமதிக்கு இப்போது நினைவு வந்தது. செயிண்ட் தாமஸ் மவுண்ட் பகுதியில் குடியிருக்கும் மேரி சுமதியின் சக மாணவி. ஆங்கிலோ இந்தியப் பெண்மணியான அவள் படு துணிச்சல்காரி. சுமதியின் உடல் அழகைப்பற்றி அவளே கூச்சம் அடையும்படி அடிக்கடி அவளிடம் நேருக்கு நேர் புகழ்ந்திருக்கிறாள் மேரி. அந்த மேரியை இப்போது சந்தித்துப் பேசினால் என்னவென்று தோன்றியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/28&oldid=1117495" இலிருந்து மீள்விக்கப்பட்டது