பக்கம்:அனிச்ச மலர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

27



சுமதிக்கு. ‘டேஸ்காலரான’ மேரி அப்போது வகுப்புக்குப் போயிருப்பாள் என்றும், முதல் பீரியடு முடிந்ததும் அவளைப் பார்த்துத் தன் அறைக்கே அழைத்து வந்து தனியாக அவளிடம் பேசிக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்தாள் சுமதி.

4

னத்தில் ஒன்றின்மேல் ஆசை அளவற்றுப் பெருகும்போது காரண காரியங்களைப்பற்றிச் சிந்திக்கத் தோன்றாது. சாத்திய அசாத்தியங்களைப் பற்றிச் சிந்திக்கத் தோன்றாது. நியாய அநியாயங்களைப் பற்றிச் சிந்திக்க தோன்றாது. எதை விரும்புகிறோமோ அதுவே சாத்தியமென்று தோன்றும். எதன் மேல் ஆசைப் படுகிறோமோ அதுவே நியாயமென்று தோன்றும். அது மட்டுமே சரியென்றுகூடத் தோன்றும்.

சுமதியும் அன்று அப்படித்தான் இருந்தாள். வகுப்புக்களுக்குப் போவதில் அவளுக்கு நாட்டமில்லை. பாடங்களிலோ, படிப்பிலோ அவளுக்குக் கவனமில்லை. எப்படியாவது உடனே நூறு ரூபாய் சம்பாதிக்க வேண்டும். அந்த நூறு ரூபாயை மணியார்டர் செய்து அதன் ரசீதை உடன் இணைத்து, நடிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் அந்த நாடகக் குழுவுக்கு விண்ணப்பத்தை அனுப்பியாக வேண்டும். அல்லது நேரிலேயே விண்ணப்பத்தை எழுதி எடுத்துக்கொண்டு போயாவது பணத்தையும் கட்டிவிட வேண்டும்.

விடுதி அறைகளுக்கான கடிதங்களைப் பட்டுவாடா செய்யும் வேலைக்காரி வராந்தாவில் தென்பட்டாள்.

"லெட்டர் ஏதாவது இருக்கா மங்கம்மா?” "உங்க ரூமுக்கு இல்லே." "இங்கே வா... உன்னாலே ஒரு காரியம் ஆகணும்...” மங்கம்மா அறைக்குள் வந்ததும் மேரியை முதல் பீரியடு முடிந்து மணியடித்ததும் தன்னுடைய அறைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/29&oldid=1146862" இலிருந்து மீள்விக்கப்பட்டது