பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42


இருப்பான் என்ற எண்ணம்... நல்லவிதமாக இருக்கவேண்டும் என்றுதானே தாய் உள்ளம் எண்ண முடியும் அதனால்!

'பாவிப்பய, ஒரு காலணாக் கடுதாசி போடக்கூடாதா?' என்று எண்ணி எண்ணி கிழவி ஏக்கம்பிடித்து அலைவது கண்டு, முதலில் பலர் சமாதானம் கூறிப்பார்த்தனர் கார்டு விலை முக்காலணாக்கூட ஆகி விட்டது... பாவிப் பயமகன் காலணாக் கடுதாசி போட்ட பாடில்லை...சமாதானம் கூறுவதைக்கூட மற்றவர்கள் நிறுத்திக் கொண்டனர். கிழவியோ, 'அக்கரை' போகிறவர்களிடமெல்லாம் கடுதாசி,கொடுத்தனுப்புவதை நிறுத்த வில்லை. சிரஞ்சீவி மணிக்கு... என்று துவங்கி, முத்தயமா என்று முடியும் அந்தக் கடிதம் ஒவ்வொன்றும், எவ்வளவு கல்நெஞ்சத்தையும் கரைத்துவிடும், அவன்தான் கல்லரை சென்று விட்டானே... பலன் என்ன கிடைக்கும்!

ஓயாமல் கடிதங்கள்!

அந்தக் கிராமமும் அடிக்கடி, 'அக்கரைக்கு' அரும்பு மீசைகளை அனுப்பியபடி இருந்தது.

நஞ்சை இருந்தது.. புஞ்சையும் உண்டு! கரும்பு பயிராகும், கால்வாய்ப் பாசனமும் உண்டு. ஆனால் அவ்வளவும், நாலைந்து பெரிய புள்ளிகளுக்குச் சொந்தம், அவர்களோ நாடாளும் நாயகர்கள் வரிசையில் இருந்தவர்கள் எனவே தலை நகரில் வசித்து வந்தனர்.

அரும்பு மீசைகள், அக்கரை சென்று ஐந்தாறு ஆண்டு பாடுபட்டால் ஆயிரம் ஐந்நூறு மீதம் பிடித்து அரையோ காலோ ஏகர் வாங்கி, பிறகு ஏதோ கால்