உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேந்தன் புலவோர்க்கு விருந்துசெய் காதை 139


முடிந்த முடிபினை முறையே செய்யலாம்

25 என்றறிவிக்க, ஏற்று மன்னன்
நன்றுநும் திட்டம் நடத்திடு வோம் நாம்;
செந்தமிழ்ப் புலவோர்க்குச் சீர்சால் அழைப்பினை
இந்த நேரமே இனிதனுப் பிடுகென,
கம்பர் முதலாம் கலைவல் புலவரொடு

30 அம்பிகா பதிக்கும் அழைப்புச் சென்றது.
உரியநேரத்தில் உரிய இடத்தினை
அரிய புலவர் அனைவரும் அடைந்தனர்.
அமர்ந்த பண்புடை அமரா வதிதான்
அமர்ந்தனை வர்க்கும் அமுது படைப்பவள்.

35 அமைந்த ஊண்வகை அளக்கற் பாலவோ?
தயிரின் பச்சடி, தகவுறு மாங்காய்ப்
பச்சடி, நல்ல பாகல் பச்சடி,
இஞ்சிப் பச்சடி, இலந்தைப் பச்சடி,
வெல்லக்காய்ப் பச்சடி, வெங்காயப் பச்சடி;

40 மாங்காய் ஊறுகாய், மாணரி நெல்லி
ஊறு காய், எலுமிச்சம் ஊறுகாய்,
நரந்தம் ஊறுகாய், நல்லிஞ்சி ஊறுகாய்,
தோப்பு நெல்லித் துவளுறும் ஊறுகாய்;
கார்ப்பே யின்றி உவர்ப்புமட் டுமிட்ட

45 துவர்ப்பு மாவடு, துவட்டிய வாழைப்பூ;
இஞ்சித் துவையல், இனிய தேங்காய்த்
துவையல், கொத்த மல்லித் துவையல்,
கறிவேப்பிலைத் துவையல், புதினாத் துவையல்,
திருவாட் சியிலைத் தெவிட்டாத் துவையல்,

50 வெல்லங் கலந்த வேப்பம்பூத் துவையல்,
பருப்புத் துவையலொடு பல்வகைத் துவையல்;
கொழீஇய பல்வகைக் காய்களின் கூட்டு;


33. அமர்ந்த - அமைதியான. 34. அமர்ந்து - விரும்பி. 35. ஊன் -உணவு; அளக்கற் பாலவோ - அளவிடும் தன்மையினவோ? 42. நரந்தம் - நாரத்தை. 52 கொழீஇய- கொழுத்த, வளமான.