பக்கம்:இலக்கியக் கேணி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10. பிரியாதிருக்க

ஆசிரியர்

செவ்வேளுக்குரியதாகிய 18ஆம் பரிபாடலின் ஆசிரியர் குன்றம்பூதனார். 'குறிஞ்சித்திணைக்குரிய முதல், கரு, உரியென்ற முப்பொருள்களையும் செவ்வனே அமைத்து நயமுறக் கூறியிருத்தலை உற்றுநோக்கும் பொழுது, இவர் அகத்திணையைப் பாடுதலில் வல்லவர் என்று தெரிகிறது......... குன்றத்தை அழகுறப் பாடியிருத்தலால் இவர் இப்பெயர் பெற்றார் போலும்' (டாடர் ஐயர் அவர்கள்).

மஞ்ஞை நோக்கிய கானவன்

திருப்பரங்குன்றத்தில் ஒரு கானவன் ஒரு மயிலை நோக்கினான்; அதன் அழகையும் களிப்பினையும் தன் உள்ளத்தே கொண்டு நின்றான். அவன் காதலி அவனை நோக்கினாள்; 'நீ என்னை நோக்காமல் மயிலைப் பார்ப்பதின் காரணம் என்ன ? இச் செயலால் நீ என்னை இகழ்கின்றாய் !' என்று கூறி ஊடினாள். அவன்அவளுடைய ஊடலை மாற்றினான் ; ' என் அன்பே! அந்த மயில் உன் சாயலைக் களவு கொள்ள எண்ணியது ; ஆனால் உன் சாயலைப் பெற முடியாமல் வருத்த முற்றது; இங்ஙனம் வருந்தும் இம்மயிலைக்கண்டு, நின் சாயலின் அருமையை நினைத்து நின்றேன்; ஆனால் நீயோ உன்னை நான் இகழ்ந்ததாக எண்ணுகிறாய்” என்று தெளிவித்தான்.