பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

33


போது தண்டவாளங்களை இணைக்கத் தேக்கு மரத்தைப் பயன்படுத்தலாம் என்று கண்டறிந்து அவைகளை வெட்டிக் கொடுக்கத் தனியார் சிலரை ஒப்பந்தத்தின்பேரில் அமர்த்தினர். மரத்தின் 'சுவை' அறிந்த தனியார் அரசுக்கு அளிக்கும் மரங்களோடு தேக்கு, மருது, போன்ற மரங்களைத் தாங்களாகவே வெட்டி கப்பல் கட்டும் தளங்களுக்கு அனுப்பினர். இவ்வாறுதான் மரத்திருட்டுத் தொடங்கியது. மரங்களின் திருட்டு அதிகமானதும் முதல் முறையாக சத்தியமங்கலத்தில் 1856இல் டாக்டர் கிளேகார்ன் என்பவரை வன அலுவலராக பாதுகாப்புக்கு நியமித்தனர். பின் 1860இல் தலைமலையிலும் 1864இல் பர்கூரிலும் வன அலுவலர்களை நியமித்தனர். தேக்கு மரங்களோடு சந்தன மரங்களையும் அரசு வெட்டிப்பயன் பெற்றது.

கிழக்கிந்தியக்கும்பினி வரும்வரை வனங்களின் கொடையாகிய மரங்களை வணிகநோக்கில் எவரும் வெட்டியது கிடையாது. 1879இல் வனத்துறை தொடக்கப்பட்டது. வடகோவை வளத்துறை 1883இல் கொள்ளேகால், சத்தியமங்கலம், பவானி என்ற மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. 1909இல் தலைமலை தனிப்பகுதி ஆனது. 1910இல் பவானியிலிருந்து பர்கூர் தனிப்பிரிவாகப் பிரிக்கப்பட்டுப் பின் 1921இல் கொள்ளேகாலோடு இணைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் அமைந்தவுடன் 1980இல் ஈரோடு வனப் பகுதி சத்தியமங்கலம் வனக்கோட்டம், ஈரோடு வளக்கோட்டம் என இரண்டாகப் பிரித்து அமைக்கப்பட்டது. 1999இல் கோபிசெட்டி பாளையத்தில் மூங்கில் வனக்கோட்டம் தனியாக அமைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட வனப்பகுதி ஈரோடு கோட்டத்தோடு இணைக்கப்பட்டது. ஈரோடு கோட்டம் அந்தியூர், மேட்டூர், காங்கயம், ஈரோடு, பெருந்துறை என 5 பிரிவுகளாகவும் சத்தியமங்கலம் கோட்டம் சத்தியமங்கலம், ஹாசனூர், தூக்கநாயக்கன்பாளையம், தாளவாடி, பவானிசாகர் என 5 பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டது. 1919 முதல் சந்தனமரங்கள் விற்பனைக்கென சத்தியமங்கலத்தில் தனிப்பிரிவு இயங்கி வருகிறது. ஈரோடு மாவட்ட மொத்தப்பரப்பில் 28.3% காடுகள் உள்ளன. மாநில சராசரி காடு 18% ஆகும்.