உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எழில் விருத்தம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எழில் விருத்தம்

27

2. சுழல் விளக்கு

கண்ணுக் கெட்டா நெடுந்துரக்
   கடலைத் தாண்டிக் காலமெலாம்
மண்ணில் விளையும் பொருளோடும்
   வாழ்க்கைக் குதவும் பொருளோடும்
விண்ணைத் தாவும் மணிமாடம்
   மேவும் பேரூர்த் துறையோரம்
கண்ணைப் பறிக்கும் ஒளிவெள்ளக்
   கதிரைப் பரப்பும் சுழல்விளக்கே ! .................................1

குன்றின் உச்சி மீதேறிக்
   குளிர்ந்த கடலை நிலப்பரப்பை
நின்று சுழன்று திசைபார்க்கும்
   நெட்டை மனிதன் போல் இரவில்
என்றும் கடலின் ஒரத்தே
   இருந்து வாழும் சுழல் விளக்கே !
ஒன்று கேட்பேன்: கோட்டான்போல்
   உனக்கும் பகலில் கண்குருடோ?................................... 2