பக்கம்:எழில் விருத்தம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எழில் விருத்தம்

39

மாடு கன்றொடு வயல்வெளி பூம்புனல்
     மலர்மிகு நீள்குன்றம்
ஊடு செஞ்சுடர் பொன்னிற மழைபொழி
     ஒளிகுறை கீழ்வானக்
காடு மேவிடும் கதிரவன் கண்டனம் !
     கவின்மிகு கதிர்அந்தி
ஓடு போழ்தினில் கீழ்த்திசை விளக்குகள்
     ஒத்தன விண்மீன்கள் !............................................. 6

பந்தி பந்தியாய் நாரைகள் இணையுடன்
     படுகையைப் போய்ச்சேர
அந்தி பூத்திடப் பூத்திடும் வேலியில்
     அழகொளி பொன்பீர்க்கு!
சிந்து பூத்திடச் செவ்வொளி பூத்திடச்
     சிரித்தது செவ்வானம் !
வெந்து பூத்திடும் வானிடை முல்லைபோல்
     விரிந்தன விண்மீன்கள் !.......................................... 7

காயும் போழ்திலும் கடந்திடு போழ்திலும்
     கதிரொளி நனlநல்கும்
பாயும் செவ்வொளி மறைந்திட மறைந்திடு
     பகலவன் வழிநோக்கித்
தேயும் திங்களும் வழியினைக் கூட்டியே
     திரும்புவோர் செயல்போலச்
சாயும் செங்கதிர் போய்விழ நன்றியாம்
     தண்ணொளி முகம்காட்டும்!................................... 8