பக்கம்:கடல் முத்து.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கடல் முத்து
5

பசையுடன் திரும்பி வந்து உன்னைக் கண்ணாலம் செய்துக்கிறேன். உன் நினைவு ஒண்ணுதான் எனக்குப் பலத்தைத் தரமுடியும், பவளக்கொடி——′

அவள் பவளவாய் திறந்து விடை ஈந்தாள். இச்சம்பவத்தை மீளவும் நினைவுகூர்ந்த அவள். பெற்றவளை நிந்தித்தாள். யார் யாரை நோவது? அம்பு எய்தவள் அக்கிழவி. அம்பை நோவதா? அவளைக் கோபிப்பதா? அவள் ஏங்கினாள். இங்ஙணம் அதிர்ச்சி ஏற்படும் என்று அவள் எப்படி எதிர் பார்த்திருப்பாள். பாவம்? பின்னர் நிகழவிருக்கும் நியதியின் நீதியை முன் கூட்டியே அறியும் ‘அஷ்டசித்தி படைத்த மாமுனியா’ அவள்?


'ம் ஜம்' என்று சதங்கை ஒலி முன் அறிவிப்பு மொழிய வந்து நின்ற வில் வண்டியிலிருந்து மாசிமலைத்தேவன் இறங்குவதைக் கண்ட பவளக்கொடி உள்ளே சரேலெனப் பாய்ந்தாள்.

‘ஆயா, மாமா வந்திருக்காக என்ற அளவில் படபடப்புடன் கூறியதைக் கேட்ட கிழவி செல்லி ஆச்சரியம் பொங்கக் கையில் வெற்றிலைச் சம்புடத்துடன் வெளியே வந்தாள்.

‘வா, தம்பி, செளக்கியமா? ஏது இந்த வீடு தேடி அத்திபூத்தாப்பிலே, உம்; முதலிலே வெத்திலை போடு தம்பி.

தேவன் வருகை கிழவியை மலைக்கச் செய்தது. அவன் சுற்று வட்டாரத்தில் பசையான ஆசாமி. கிழவியுடன் கூடப் பிறந்தவன். பர்மா, மலேயா, கண்டி இதெல்லாம் அவனுக்குத் தண்ணிர் பட்ட பாடு.

செல்லியும்.மாசிமலையும் உடன் பிறப்பில் ஒட்டிக்கொண்டார்களே தவிர, இயற்கையில் அவர்கள் ஒட்டவில்லை. சில மனத்தாங்கல்கள்! கடைசியில் செல்லியின் கணவன் இறந்த சடங்கில் ராசியானான் தேவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/14&oldid=1181872" இலிருந்து மீள்விக்கப்பட்டது