பக்கம்:கடல் முத்து.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தங்கச்சி

 ந்தி வெயிலின் செங்கதிர்கள் எங்கும் பரவிக்கிடந்தன. அப்போதுதான் அவன் அடிமேல் அடிவைத்து அந்த ஆலமரத்தடிக்கு வந்து சேர்ந்தான். பரந்து அடர்ந்து நிழல் கவிழ்ந்து நின்ற ஆலமரம்தான் அவனுடைய சுவர்க்க பூமி!

‘தங்கச்சி’ என்று அன்பு கனிந்த குரலில் அழைத்தான்.

அண்ணாச்சி, வந்திட்டிங்களா?′ என்றாள் அவள்.

ஆர்வத்துடன் பதில் கொடுத்துக்கொண்டே கை வேலையை அப்படியே போட்டுவிட்டு எழுந்த அவள், தன் அண்ணன் நீட்டிய பையை வாங்கிக் கீழே வைத்தாள். அப்புறம் ஊன்றுகோலைத் தரையில் ஊன்றியவண்ணம் மெதுவாகக் கீழே உட்கார்ந்தான் செல்லையா. பிறகு தலையில் சுற்றியிருந்த ‘முண்டாசை’ அ வி ழ் த் து முகத்தைத் துடைத்துக்கொண்டே, தன் முன் நின்றுகொண்டிருந்த தங்கையை நோக்கினான். அவளுடைய முகத்தில் தனிப்பட்ட சோபிதம் காணப்படுவதைப் பார்த்ததும் அவனுக்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை.

‘தங்கச்சி, இன்னிக்கு நரி முகத்திலேதான் முழிச்சிருக்கணும். கல்யாணக்கார வீட்டு விருந்துசோறு கெடச்சுது. சாப்பிடறதுக்கு ஏற்பாடு பண்ணு, அப்புறம் இருட்டிவிடும்.’

‘கோயிலிலேருந்து வந்த ஒரு அம்மா, தேங்காமூடி ஒண்ணு கொடுத்தாங்க, அதிலே தொவையல் செஞ்சிருக்கேன், அண்ணாச்சி′ என்றாள் அவள்.

அன்றைக்குக் கிடைத்த அன்னத்தைச் சாப்பிட இருவரும் உட்கார்ந்தனர், சாப்பாடு முடிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/23&oldid=1185073" இலிருந்து மீள்விக்கப்பட்டது