பக்கம்:கடல் முத்து.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
18
கடல் முத்து

 ‘அண்ணே, இன்னிக்கு எந்திருச்சது நல்ல பொழுதுதான் போலிருக்கு, ஒங்க இஷ்டப்படியே ஆகட்டும். அம்மாக் கிட்டேயும் சொல்லிப்பிடனும்· அப்பத்தான் அதுக்கு மனசு சந்தோசமாயிருக்கும்.’

‘ரொம்ப சரிங்க. நாளைக்குக் காலம்பற இதே இடத்துக்குக் கணக்காப் பார்க்கட்டுமா? அப்படியே ஒங்களையும் கூட்டிக்கிட்டுப் போய்த் தங்கச்சியைக் காண்பிக்கிறேன்!’

மீண்டும் புரண்டு படுத்தான். கண்களில் தூக்கம் சொக்கியது.

‘தங்கச்சி!’

‘அண்ணாச்சி!’

‘இன்னிக்கு என்கூட நீயும் வரவேண்டாம். இருக்கிற அரிசியிலே இன்னொரு ஆளுக்கும் கூடச் சேர்த்துப் பொங்கிவை.’

அதிகம் சொல்லவில்லை. இருந்தும் அவன் நடையைக் கட்டிவிட்டான். ஆனால் வள்ளியின் நிம்மதியான உள்ளத்தைப் பெருஞ்சிந்தனையில் அமிழச் செய்துவிட்டல்லவா அவன் சென்றுவிட்டான்?

‘கூட ஒரு ஆளுக்கும்——யார் அந்தப் புது ஆள்?’ என்று யோசித்தாள் வள்ளி.

எல்லாவற்றையும் தயார் செய்து அவர்கள் வரவுக்குக் காத்திருந்தாள் வள்ளி.

கனவு கண்டு விழிப்பவள்போலத் தன் முன் நின்று கொண்டிருந்த தமையனைக் கண்டவுடன் ‘அண்ணாச்சி’ என்றாள் திடுக்கிட்டு. சொல்லிவைத்தாற்போலத் தன் அண்ணன்கூட மற்றொரு மனிதர்——முன்பின் அறியாத புது மனிதர்——நிற்பதைக் கண்டாள்.

‘மச்சான், அதுதான் என் தங்கச்சி′ என்றான் செல்லையா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/27&oldid=1191486" இலிருந்து மீள்விக்கப்பட்டது