பக்கம்:கடல் முத்து.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தங்கச்சி

19

‘யாரு இந்த ஆளு?’ மனதிற்குள்ளாகக் கேட்டுக்கொண்டாள் வள்ளி. அவள் உள்ளத்தெழுந்த அக்கேள்விக்குக் குறிப்பறிந்து பதில் சொல்பவன்போல வள்ளியை அருகில் அழைத்துக் காதும் காதும் வைத்ததுபோல ஏதோ சொன்னான் செல்லையா.

‘கண்ணாலம்——எனக்கா?’

பிரமித்துப் போய் இக்கேள்வியைக் கேட்டாள்.

‘அண்ணாச்சி, மூத்தது நீங்க இருக்கிறப்ப அதற்குள்ளே எனக்கு என்ன அவசரம்?’

வள்ளி, நொண்டியா இருக்கிற லட்சணத்திலே கண்ணாலம்.ஒண்ணுதான் கொறச்சலா? நீ எப்பவும் சந்தோசமாயிருந்தாப் போதுமின்னுதானே நான் நெனைச்சுக்கிட்டிருக்கேன். நீயும் மச்சானும் கை பிடிச்சுக்கிட்டா அப்புறம் துளிக்கூடக் கவலை கிடையாது. தங்கச்சி...’ என்று கெஞ்சினான் செல்லையா.

ஆல இலைத் தடுக்கில் சாதம் பறிமாறினாள் இரண்டு பேருக்கும். உண்டு முடிந்ததும் நெடுநேரம் அளவளாவிப் பேசிக்கொண்டிருந்தார்கள் மூவரும். மச்சானின் பார்வை வள்ளியின்மீது விழுந்திருப்பதையும், அவள் அவனையே பார்த்த வண்ணமிருக்கையில் உதடுகளில் புன்முறுவல் நெளிந்தோடுவதையும் செல்லையாதானா கவனிக்காமல் இருப்பான்!

‘மச்சான், உங்க மனசுபடி எல்லாம் செஞ்சுப்புடலாம். பொழுது போகப்போவுது. என்னைக் கண்டாத்தான் அம்மாவுக்கு உசிரு வரும். நாலு நாளிலே எல்லாத்தையும் முடிச்சுடலாம்.’

‘சரி மச்சான்!’ என்று விடை கொடுத்தனுப்பினான் செல்லையா. அப்பிரிவில் வள்ளியின் பெண் இதயம் உள்ளாற வேதனைப்பட ஆரம்பித்தது.

கையால் கன்னத்தைத் தாங்கிய வண்ணம் சோகமே உருவாக உட்கார்ந்திருந்தாள் அந்தப் பிச்சைக்காரப் பெண்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/28&oldid=1231132" இலிருந்து மீள்விக்கப்பட்டது