பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100


சமயத்தைச் சடங்கைப் பொய்மைச்
சாத்திரக் கூத்தை யெல்லாம்
உமியைப்போல் கருதி யென்றன்
உள்ளத்தில் ஒதுக்கி வாழ்ந்தேன்.
நமையும்ஏ மாற்றிக் கொண்டிந்
நாட்டை ஏமாற்று தற்காய்ச்
சமைத்தபொய்ச் சடங்கை யென்றன்
சாவுக்குச் செய்ய வேண்டாம்.


பொங்கிடும் வெள்ளம் வீங்கப்
புதுப்புனல் பாய்ச்சு கின்ற
கங்கையை நினைக்குந் தோறுங்
களிமகிழ் வெய்து கின்றேன்.
திங்களும் வானு மாகத்
தித்திப்புங் கொய்யா வாகக்
கங்கையும் நானும் நீங்காக்
காதலா லிணைந்து விட்டோம்.


மாங்குயில் கூவும் நாளில்
மழைசரந் தொடுக்கும் நாளில்
பூங்கர மசைத்து வேனில்
பூப்பந்தல் போடும் நாளில்
தாங்கரும் மகிழ்ச்சி வெள்ளம்
தாவிடக் கங்கை யோரம்
தேங்கிய அழகை யுண்டு
திரிந்துநான் மகிழ்ந்த துண்டு.