பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நடையும் சமுதாய நோக்கும் பேராசிரியரின் எழுத்தில் பளிச்சிடுகின்றன’ எனத் திறனாய்வாளர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.

மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் தமிழ்மை போற்றும் தகைஞராக விளங்கியதற்கு அவர்தம் தமிழ்க் கல்வியே அடிப்படையாகும். மொழிநடை என்பது செம்மையும் செறிவும் சீர்மையும் நோக்கியதாகவே இருக்க வேண்டுமென்ற கோட்பாடு உடையவர். அதனின்றும் அணுவளவும் பிசகாத உறுதியினர்.

கம்பரைப் போல் தமிழ் ஒலி மரபு, மொழி மரபைக் காத்தவரும், சொல்லாக்க நெறி கண்டவரும் எவருமிலர் ஒரு செய்யுளின் ஈற்றடிகள் முன்னைய அடிக் கருத்துக்களைத் தாங்கி, முத்தாய்ப்பாக விளங்குவதைக் கம்பன் பாடல்களின் ஈற்றடிகளை வைத்து, இவர் விளக்கும் திறம் புதிய அணுகு முறையாகும். அதற்கு இவர் “உடற் பாரத்தைக் காலடி தாங்குவது போலக் கூற்றின் புகலிடமாக ஈற்றடிகள் உள” என்று விளக்குகிறார்.

“காப்பியம் ஒரு கல்லில் செய்யும் குடவரைக் கோயிலன்று: ஒரு கோபுரமுடைய கோயிலுமன்று. கல்பல அடுக்கிய உள்ளும் புறமும் கோபுரங்கள் கொண்ட வானளாவிய கட்டுமானக் கோயிலாகும்” என்பார். கம்பன் காப்பிய முழுமையைத் தம் அறிவுக் கண்ணாடியில் கண்டுகளித்த, இக்கவித்திறனாளி, அக் காப்பியத்து வரும் நாடகப் பண்பு மீக்கூர்ந்த படலங்களையும் நம்முன் வரிசைப்படுத்துகிறார். இராமாயணத்தின் பல படலங்கள் தனித்தனி நூல் எனத் தகும் சிறப்புடையன. செகப்பிரியரின் நாடகங்கள் அனைத்தையும் தொகுத்தால் இராமாயணத்தின் பாதியளவுதானே இருக்கும்! காப்பியங்களில் காட்சிகள் பலவும் இரத்தினக் கம்பளம்” விரித்தாற்போலக் காட்டப்படுகின்றன.

எங்கள் பதிப்பகத்திற்குப் பெருமை சேர்க்கும் நல்லாசிரியப் பெருமக்களுள் முதன்மையான இவர்தம் படைப்புக்களைப் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து வெளியிட்டுப் பதிப்பகம் பேரும் புகழும் பெற்று வருகிறது. பயனுள்ள நூல்களை வெளியிடும் ஒவ்வொரு முறையும் பூரிப்போடும் உவகையோடும் களிப்போடும் சாதனை மலர்களைச் சூடி மகிழ்கிறது.

பெரும் பேராய்வுக்குப் பதிப்புரை எழுதும் பேறு கிடைத்ததை எண்ணிப் பெருமகிழ்வு கொள்கிறேன். நல்ல நூலை நாட்டிற்கு அளிக்கும்போதெல்லாம் என் சிந்தை மகிழ்கிறது. தோள்கள் பூரிக்கின்றன. பதிப்புத்_துறையில் உயர்வு தரும் நெறிகளை மேற்கொள்ள உறுதி கொள்கிறேன்! உவகை அடைகிறேன்.