பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



முன்னுரை

தமிழ்ப் பேராசிரியர் மூதறிஞர் இரா. பி. சேதுப்பிள்ளைதம் அன்னையார் நினைவாகச் சொருணாம்பாள் நிதிச் சொற்பொழிவு என்னும் ஒர் அறக்கட்டளையை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நிறுவினர். இவ்வமைப்பின்கீழ் கம்பர் என்ற புலவர் பெருமான் தலைப்பில் 1964 பிப்பிரவரி 21-22-23 ஆம் நாட்களில், காப்பியப் பார்வை, காப்பியக் களங்கள், காப்பிய நேர்மை என்ற முத்திறப் பொருள் பற்றிச் சொற்பொழிந்தேன்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவனாகப் படிப்புதவி பெற்றுச் சேர்ந்து 1940இல் வித்துவான் பட்டம் எய்தியதும், ஆய்வு மாணவனாக இருந்தபின் விரிவுரையாளனாகப் பணி தொடர்ந்ததும், நெட்டிடைக்குப்பின், முத்துறையும் ஒருங்கிணைந்த தமிழ்ப்பெருந்துறைக்கு 1970 முதல் ஏழாண்டுக் காலம் தமிழ்ப் பேராசிரியனாகவும் இந்தியப் புல முதன்மையராகவும் பணியில் இருந்ததும், பல்கலைக்கழகம் 1979இல் பொன் விழாக் கொண்டாடிய ஞான்று மூதறிஞர் (D. Litt) என்ற சிறப்புப் பட்டம் எனக்கு வழங்கியதும் எல்லாம் என் வாழ்வின் நற்கூறுகளாகும். வள்ளல் அண்ணாமலையரசர் மேல், 'நில்லாத செல்வத்தை நிலைக்கச் செய்தான் என்று யான் பாடிய எண்சீர்ப் பாட்டும், அரசர் முத்தையவேள் மேல், 'மணி காட்டும் கோபுரம் போல் உயர்ந்த நெஞ்சும்’ என்று தொடங்கும் எனது எண்சீர்ப் பாட்டும் பல்கலைக்கழக வாழ்த்துப் பாடலாக ஏற்றுக் கொள்ளப் பெற்றன. இப்பாடல்கள் என் நன்றியுணர்வுப் பதிகங்களாகும்.

கம்பர் என்ற முப்பொழிவுகளும் காப்பியவிலக்கியத்தின் முழுப் பார்வையை வலியுறுத்துவன. பெருங்காப்பியச் செய்யுட்களைத் தனிப்பாடற்றிரட்டாக மதித்துத் தொகுக்கும் குறும்பார்வை முழுவுண்மையங்களைப் புலப்படுத்த மாட்டாது. காப்பியங்களில் பல செய்யுட்களைத் தேர்ந்து பொதுவிலக்கியப் பரப்புக்காகத் தொகுத்துத் திரட்டு வெளியிடுவதையும், தனிப் பாடல்களில் இலக்கிய நயங்காண்பதனையும் நான் குறையாகக் கருதவில்லை. அவை ஒருவகை இலக்கியத் தொண்டுகள். எனினும் காப்பியம் என்ற இலக்கியவினத்தைப் பொறுத்தவரை, முழுப் பார்வையே உரிய நெறியாகும். ஆழ்ந்து நின்று தொடர்ந்து ஓடிக்கிடக்கும் கவியுள்ளத்தையும் அனைத்துப் பாடல்களிலும் பாய்ந்தோடும் உணர்ச்சியொருமையையும் கவிஞனின் நினைவாற்றலையும் அமைப்புக் கட்டுமானங்களையும்