பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காண்பதற்கு முழுப்பார்வையே தலைப்பார்வையாகும் என அறிக. முழுப்பார்வையம் என்ற இலக்கியக்கண் எனைக் காப்பியங்கட்கும் எம்மொழிக் காப்பியங்கட்கும் பொருந்தும் எனவும் உணர்க. ‘மயிலுடைச் சாய லாளை வஞ்சியா முன்னம் நீண்ட எயிலுடை இலங்கை நாதன் இதயமாஞ் சிறையில் வைத்தான்.” ஆரணிய. (3151) "கள்ளிருக்கும் மலர்க்கூந்தற் சானகியை மனச்சிறையிற் கரந்த காதல் உள்ளிருக்கும் எனக்கருதி உடல்புகுந்து தடவியதோ ஒருவான் வாளி.” உயுத்த. (9940) இதயமாஞ் சிறையில் சீதையை வைத்தான் இராவணன் என்ற ஆரணியக் கருத்துக்கும் மனச்சிறையில் கரந்த காதல் சுவடற்று அறவே ஒழிந்தது என்ற உயுத்தக் காண்டக் கருத்துக்கும் இடைப்பட்டு 6589 செய்யுட்கள் கிடக்கின்றன. இவ்வளவு பெரிய தொகைச் செய்யுட்களின் உள்ளோட்டமும் பயனும் இராவணன் தூய்மையாக்கம் என்ற முழுப் பார்வையினாற்றான் வெளிப்படும். இன்றைய கல்வியுலகிலும் ஆய்வுக்களத்திலும் முழுப் பார்வையம் என்ற திறப்பாடு கடைப்பிடிக்கப்படவில்லை. அதனால் பெருங்காப்பியர்களின் சிந்தனையோட்டங்கள் வெளிப்படாமல் திருமறைக்காடாயின. இதன் விளைவு என்ன? சிலப்பதிகாரம், பெருங்கதை, சீவகசிந்தாமணி, பெரியபுராணம், இராமாயணம் போன்ற பெருங்காப்பியம் இயற்றும் படைப்பாற்றலை இக்காலக் கவிஞர்கள் இழந்து வருகின்றனர். முழு நூற்படிப்பும் முழுச் சிந்தனையும் வாயாதபோது, தனிச்செய்யுள் வேட்கையும் சிந்தனைக் குறுக்கமும் மேலோங்கும் போது, அகல் நெடுங்காப்பியப் படைப்புக்குத் தக்க சூழ்நிலை எங்கே வரும்? முன்னைக் காப்பியங்களை முழுப்பார்வையோடு திறனாடுவதற்கும், வருங்காலத்துப் பெருங்காப்பியப் பனுவல்கள் முழுப் பார்வையோடும் பிறப்பதற்கும் கம்பர் என்ற இத்திறனுல் தூண்டுகோலாகும் என்று நம்புகிறேன். இப்பொழிவுகளின் முழுநோக்கம் இதுவே. மணந்த ஞான்றினும் மக்களை ஈன்ற ஞான்று வயாவும் வருத்தமும் உற்ற பெண்குலம் பெரிதும் உவக்கின்றது. அதுபோல