பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 - கம்பர் இரு மந்திரப் படலங்கள் அயோத்தியா காண்டத்து மந்திரப் படலத்தையும் உயுத்த காண்டத்து மந்திரப் படலத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். எந்த மந்திரப்படலத்துப் பேச்சுரிமை உண்டு? செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்பு எந்த வேந்தனுக்கு உண்டு? இராமனுக்கு முடிசூட்ட வேண்டும் என்ற செய்தியைத் தெரிவிக்கக் கருதித் தயரதன் அமைச்சவை கூட்டுகின்றான்; தன் முதுமையைப் பலவாறு எடுத்து விளம்புகின்றான். பொருந்தும் நாள் நாளை நின் புதல்வற்கு என்று சோதிடர்கள் மொழிந்தனர். ‘புல்கு காதற் புரவலன் போர்வலாய், நல்கு நானிலம் நாளை நினக்கு என்று வசிட்டனும் மொழிந்தான். முடிபுனைதற்கு உரியவன் மூத்த மகனான இராமனே என்பதில் தடையில்லை. ஒரு சிறு குடிசைத் திருமணங்கூடப் பேசிய மறுநாள் நாள் வைத்து முடிப்பதில்லையே. எட்டிய சொந்தக்காரர்கள் கூட வந்து கலந்து கொள்ளவேண்டும் என்று எல்லார்க்கும் பொருத்தமான நாட் பார்த்து நாழிகை பார்த்து வைப்பது உலகமுறை. போர்ப்பறையும் சாவுப் பறையும்தான் திடீரென முழுங்குமன்றி முடிப்பறையும் விழாப்பறையும் மணப்பறையும் திடீரென ஒலிப்பது உண்டா? அயோத்தி அமைச்சரின் பண்புகள் பற்றிக் கம்பர் வானளாவப் புகழ்கின்றார். 'உற்றது கொண்டு மேல்வந்து உறுபொருள் உணரும் கோளார். எனவும், மும்மையும் உணரவல்லார் எனவும், தலைமகன் வெகுண்ட போதும் வெம்மையைத் தாங்கி நீதி விடாது நின்றுரைக்கும் வீரர்? எனவும் தயரதன் மந்திரிகள் பாராட்டப்படுகின்றனர். இராமனுக்கு முடிபுனைதல் சரி. ஆனால் நாளையே அது செய்ய வேண்டிய கட்டாயம் என்ன என்று எந்த அமைச்சனாவது கேட்டானா? தம்பியராம் பரதனும் சத்துருக்கனும் இல்லாதபோது முடிசூட்டுவிழா நடத்தலாமா என்று வசிட்டனாவது கேட்டானா? ஏன், இராமன்தான் கேட்கக் கூடாதா? அறுபதினாயிரம் ஆண்டுகள் முடிசுமந்த தயரதனுக்குப் பரதன் வரும்வரை சிலநாள் முடி சுமந்திருப்பது பாரமாகுமா? மறுநாள் முடிசூட்ட நினைத்ததும், பரதனையும் சத்துருக்கனையும் கேகய நாட்டிற்கு அனுப்பியபின் அமைச்சரைக் கூட்டி முடிசூடுதல் பற்றித் தயரதன் வெளியிட்டதும், யார் மனத்திலாவது பட்டதா? இராமனாவது, வசிட்டனாவது இது சமயம் அன்று எனத் தடுத்திருந்தால் கூனி சூழ்ச்சி செய்ய எண்ணியிருக்கக் மாட்டாள், எண்ணியிருந்தாலும் பலித்திருக்க மாட்டாது. பாக்கியம் புரிந்திலாப் பரதன் தன்னைப்பண்டு ஆக்கிய பொலன்கழல் அரசன் ஆணையால் தேக்குயர் கல்லதர் கடிது சேணிடைப் போக்கிய பொருளெனக்கின்று போந்ததால்.