பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய நேர்மை 1 15 முடிக்கின்றார். தன்னேரில் லாத்தலைவன் வேண்டுகோள் பலிக்காத இடம் இது என்று தெரிந்து கொள்ளுங்கள். தயரதன் சொல்லும்,இராமன் சொல்லும் தத்தம் மனைவியரிடத்துச் செல்லுபடி ஆகாமையால் இராம காப்பியம் விரிகின்றது. காப்பியம் இடையறாது நீளநீளச் செல்லவேண்டும் எனின், இடையிடையே குற்றக் களங்கள் அமைதல் வேண்டும். கைகேசியின் இரக்கமின்மை காப்பியத் தலைவனான இராமனை முடிதுறந்து நாடுதுறந்து மனைவியோடு காடேகச்செய்தது. அவள் இரக்கமின்மைக்குக் காப்பிய வேகம் அவ்வளவே. அதற்கு மேலும் காப்பிய்ம் வளர வேண்டும் எனின், பிறிதொரு புதுக்காரணம் வேண்டும். அக்காரணந்தான் சீதை பொன்மானைப் பிடித்துத்தர வேண்டும் என்று வலியுறுத்தியது. இராமாயணக் காப்பியம் ஒருவகையால் நோக்கின் பெண் இயக்கக் காப்பியம்; பெண்ணின் சிறுமையால் தாழ்ந்து பெண்ணின் பெருமையால் உயர்ந்த காப்பியம். கூனி, கைகேசி, சீதை, சூர்ப்பனகை என்ற நாற்பெண்களாலும் தொடர்ந்து நீளும் ஒரு காப்பியம். கைகேசியால் தயரதனும் சீதையால் இராமனும் சூர்ப்பனகையால் இராவணனும் நிலைதடுமாறியதைப் புலப்படுத்தும் ஆடவர்தம் அவலக் காப்பியம் என்று இராமாயணத்தை நோக்கலாம். - இராமன் பிழைபாடு காடேகிய மூவரும் பஞ்சவடியில் உள்ளனர். சூர்ப்பனகை அங்கு வந்து இராமனைக் காதலித்தாள். அவன் அந்தி வணக்கம் செய்யச் சென்ற சமயம் பார்த்துச் சீதையைக் கைப்பற்ற எண்ணினாள். சாலையைக் காத்திருந்த இலக்குவன் அரக்கியின் வஞ்சக எண்ணத்தை அறிந்து அவள் உறுப்புக்களைக் கொய்தெறிந்தான். அழுதரற்றிய சூர்ப்பனகை இராவணனுக்குச் சீதைமேல் காமம் ஊட்டினாள். இராவணன் சூழ்ச்சிப்படி மாரிசன் மாய மானாகச் சீதை முன் வந்து விளையாடினான். இதனைப் பற்றித் தருக என்று அவள் இராமனை வற்புறுத்தும்போது, இது மாயப் பொன்மான் என இலக்குவன் தடுத்துரைத்தான். உலகத்து உயிர்கள் பலகோடி; ஏன் இது மெய்ம்மானாக இருக்கக் கூடாது என்று இராமன் அமைதி கூறுகையில், மறைந்து போகுமுன் பற்றித்தருக என்று சீதை விரைவு படுத்தினாள். இந்நிலையில், இராமனுக்கும் அடிமைத் தம்பிக்கும் பலமான சொற்போர் நிகழப் பார்க்கின்றோம். இராமாயணப் போக்கில் இராமன் தவறும் இடங்கள் பலவற்றில் இலக்குவன் அறிவுடைத் தம்பியாக விளங்குவதைக் காண்கின்றேன்.