பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரு பரம்பரைகள்

21



கம்பங்கொல்லை விற்றாயிற்று! 'அந்தக் கொல்லையின் விலையும், குலைக்கும்போதும் நாசுக்காகக் குலைக்கும் நாய்களின் விலையும் ஒன்று! அங்கே 250ரூபாயில் நாய் வாங்கினார்கள். இங்கே இரண்டு தலைமுறையாகக் குடும்பச் சொத்தாக இருந்த கம்பங் கொல்லையை 250-ரூபாய்க்கு விற்று விட்டார்கள்! இந்த நிலையிலே, பெயர் சுகானந்தம் என்று இருந்து பயன்? சுகமும் கிடையாது, ஆனந்தமும் கிடை யாது!

தனபாலச் செட்டியார், ஒரு காலத்தில், சுகானந்தத்தோடு, சேர்ந்து வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவர். சுகானந்தம் இன்னமும், அந்தச் "சுவல்ப" வியாபாரத்திலே தான் இருந்து வருகிறார். தனபாலச் செட்டியாரோ, எப்படியோ இலட்சாதிகாரியாகி விட்டார்? என்றாலும், பழைய சினேகத்தை மட்டும் விட்டுவிடவில்லை. வீட்டிலே நடைபெறும் எந்தக் காரியத்துக்கும் சுகானந்த முதலியாரை அழைப்பார் 'சிலதுகள் அதிர்ஷ்டம் வந்ததும் தலைகால் தெரியாமல் ஆடும் நம்ம தனபாலு அப்படிப் பட்டவனல்ல' என்று சுகானந்தம் தன் நண்பர்களிடமெல்லாம் கூறுவான்.

'ஏம்பா தனபாலு!' என்றுதான், சுகானந்தம் அழைப்பது வழக்கம். நேரிலே பேசும்போது, தன் நண்பர்களிடம் பேசும் போதும், தனபாலு என்று அழைத்த அதே சுகானந்தமே, சில சமயங்களில் செட்டியார்! என்று அழைக்க வேண்டி நேரிட்டுவிடும். பங்களாவுக்கு ஒரு காவல்காரன் ஏற்பட்டு விட்டான். அவன் யார் உள்ளே போவதானாலும், "யார் ? என்ன வேலையாக வந்தீர்கள்?" என்று கேட்டுவிட்டுத்தான் அனுப்புவான். சுகானந்தமும், தனபாலும் ஒரே வியாபாரம் செய்தவர்கள், நண்பர்கள், என்று அவன் கண்டானா! தெரிந்தாலுந்தானென்ன! தனபாலச் செட்டியார், அவனுக்கு எஜமான், சுகானந்தம், யாரோ ஒரு ஆசாமிதானே! அப்படித்தானே அவன் கொள்ள முடியும்? ஒரு நாள், சுகானந்தத்தையும் அவன், வாயற்படியண்டை நிற்க வைத்துவிட்டான்.