பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

கற்பனைச்சித்திரம்



பெருமைப்படுத்தலானான். இந்த நிலையிலே இருந்தது, இருவரின் நட்பும்.

சிங்காரத்துக்கு, அந்தக் குச்சு நாய்மீது ஏற்பட்ட ஆசை அடிக்கடி அவனைத் தனபாலச் செட்டியாரின் பங்களாவுக்கு இழுக்கலாயிற்று. ஜிம்மியும் ஜூலியாவும் ஊடலோடு திருப்தி அடைத்துவிடுமோ! அழகான இரண்டு "குட்டிகளை " ஈன்றெடுத்து ஜூலியா, பெருமையோடு அவைகளையும், அவைகளைக் கண்டு பூரிக்கும் ஜிம்மியையும் பார்த்து மகிழ்ந்தாள். குட்டிகளிலே ஒன்று வெள்ளை, மற்றொன்று கருப்பு! நிறத்திலே மாறுபாடு இருந்தது, அழகோ சமம். சிங்காரமோ, இரண்டிலே எதையாவது ஒன்றைப் பெற, தவம் இருக்கவும் தயாரானான். தகப்பனாரிடம் மன்றாடினான், ஒரு 'குட்டி'யை வாங்கித்தரச்சொல்லி.

"அப்பா........."

"என்னடா........."

"அந்த நாய்க்குட்டி..........."

"அடே, நமக்கேண்டா அந்தச் சனியனெல்லாம்"

"போ அப்பா ! எவ்வளவு அழகாக இருக்கு"

"ஆமாம், அழகுதான், ஆனால் அதற்குப் பாலும் பிஸ்கட்டும் வேண்டுமே ஒரு நாளைக்கு எட்டணாவுக்கு"

"எப்படியாவது வளர்க்கலாம் அப்பா நீங்கள் கேட்டுப்பாருங்களேன் செட்டியாரை"

"கேட்டால் கட்டாயம் கொடுப்பான் தனபாலு, ஆனாலும், நமக்கு ஏண்டா நாயும் பூனையும்"

தந்தைக்கும் மகனுக்கும் இது பேச்சு.

"கருப்பு நிறம்? செச்சே, டர்ட்டி, நமக்கு வேண்டாம்"