பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரு பரம்பரைகள்

25



"வெள்ளை நிறத்திலும் ஒரு குட்டி இருக்கிறது சார். இன்கம்டாக்ஸ் ஆபீசருக்கு ஒன்று, உங்களுக்கு ஒன்று தருவதாக நான் முன்பே தீர்மானித்துவிட்டேன்."

"சரி! வெள்ளை நிறத்திலே இருப்பதைக் கொண்டுவா. ப்யூன், இப்போதே வேலைகளைச் சரியாகச் செய்வதில்லை, இந்த நாய்க்குட்டியும் வத்துவிட்டால், தீர்ந்தது, அவன் முழுச் சோம்பேரியாகிவிடுவான்."

டிப்டி கலெக்டர் தாமோதரம் பிள்ளைக்கும், தனபாலச் செட்டியாருக்கும், அதே நாய்க்குட்டி விஷயமாக நடந்தது, இந்த உரையாடல், டிப்டிக் கலெக்டர், செட்டியார் போன பிறகு, தனது ப்யூனிடம் அந்தச் செட்டியார் பெரிய தொல்லை தருகிறார் என்றுகூடக் குறை கூறினார். செட்டியாரோ, கலெக்டர் துரை வீட்டிலே தான் கொடுத்த நாய் வளரப்போவது தெரிந்து பெருமை அடைந்தார்.

சிங்காரத்தின் தொல்லை தாங்காது சுகானந்தம் தனபாலச் செட்டியாரிடம் சென்று நாய்க்குட்டி வேண்டுமென்று கேட்டபோது, செட்டியார் மறுப்பார் என்று கொஞ்சங்கூட எண்ணவேயில்லை கேவலம் ஒரு நாய்க் குட்டியைப், பால்ய சிநேகிதனுக்குத்தர, தங்கமான குணம் படைத்த தனபாலு தடை சொல்வானா என்று நினைத்தார். செட்டியார் சொன்ன பதிலைக் கேட்டபோது, சுகானந்தத்துக்குத், தூக்கிவாரிப்போட்டு விட்டது.

"நாய்க்குட்டியா? சரிதான், டிப்டி கலெக்டர் இருக்கிறாரே, அவர், இந்தக்குட்டி தனக்கு வேண்டுமென்று, கெஞ்சிக் கூத்தாடினார். என்னசார் இது, ஒரு குட்டியை இன்கம்டாக்ஸ் ஆபீசர் வேண்டுமென்றார், சரி என்று அரைமனதுடன் ஒப்புக்கொண்டேன். இருப்பது இன்னும் ஒன்றுதான், அதையும் கொடுத்துவிட்டு எப்படிதான் சார் மனசு நிம்மதியிருக்கும் என்று எவ்வளவோ சமாதானம்