பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

கற்பனைச்சித்திரம்



மாணவர் முன் நீட்டி, அவர் தம் சேட்டையினை ஓட்டிவிட இஃதோர் வாய்ப்பு என்று எண்ணினார். எனவே, இறுப்பூதெய்தினார்,

ஆலமரத்தடியார் கோயில் அர்ச்சகர் அருணாசல ஐயருக்கும் அன்று ஆனந்தந்தான். வௌவால் வாழ்ந்து வந்த அக்கோயிலின்மூலம் அவருக்கு வருமானம் எங்கிருந்து கிடைக்கும் ! கோயில் வாசலிலே உட்கார்ந்து கொட்டாவி விட்டுக்கிடந்தார். பலவிதமான யோசனைகளுக்குப் பிறகு, அவர் ஊர்மக்களுக்கு ஆலமரத்தடியார் கோயிலிடம் பக்தி சிரத்தை உண்டாகச் செய்யவேண்டும். அப்படிச் செய்தால்தான் கோயிலுக்குப் பலரும் வருவார்கள், வருமானம் கிடைக்கும் என்ற முடிவுக்கு வந்தார். அவர், இந்தக் கோயில் பாத்யதையை ஒரு துரும்பாக மதித்தகாலம் ஒன்றுண்டு. அப்போது அவருக்குப் பட்டினத்திலே உத்யோகம். கிரகம் செய்த கோளாறினால் அதை இழக்க நேரிட்டது. அதன் பிறகே அவருக்கு ஆலமரத்தடியாருக்குச் சேவை செய்ய வேண்டுமென்ற அக்கரை தோன்றிற்று "பார்த்திங்களா, சாமி என்னமோ பட்டணம் பட்டணமுன்னு போனிங்களே, பாருங்க, ஆலமரத்தடியார் அழைச்சிட்டு வந்தாரு, விடுங்களா அந்தப் புண்யம்" என்று கூறுவர் கிராம மக்கள். "இதிலேமட்டும் குறைவில்லை! கோயில் பக்கமோ வருவதில்லை. என்ன செய்வதாம் இந்தக் கோயிலைக் கட்டிக்கொண்டு ஈ ஓட்டிக்கொண்டிருக்கிறேன்" என்று அருணாசல ஐயர், விசனத்துடன் கூறுவார். கடைசியிலேதான் யுக்தி தோன்றிற்று, மக்கள் மனதில பக்தி புகுத்தும் வழி கண்டுபிடித்தார். ஆலமரத்தடியார் கோயில் மகத்துவத்தை மக்களுக்கு எடுத்துக்கூறவும், பொதுவாகவே பக்தி மார்க்கத்தின் பெருமையை மக்களிடம் பேசவும், ஓர் சொற்பொழிவு ஏற்படுத்த எண்ணினார். சத்கதா காலட்சேபத்துக்குக் கொஞ்சம் பொருட் செலவு பிடிக்கும், எனவே, பிரசங்க பூஷணப் புலவர் பூலோகநாதரை, அன்புடன் அழைத்தார், அரியதோர் சொற்பொழிவு நடத்தும்படி. அவருக்குத்தான் இத்தகைய