பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

கற்பனைச்சித்திரம்



சபையிலே நின்று பேசக்கூடிய அறிவாற்றல் உண்டோ எனில், இல்லை என்பேன் என்று கூறினீர், திரு. வி. க. இல்லை, என்று ஒரு முறை மட்டும் கூறார், இல்லை, இல்லை, இல்லை என்று மும்முறை கூறுவார்" என்று சீடன் கூறினான். சிரித்தார் புலவர், எழுது என்றார்.

"சிலர், எதனைக் கூறும்போதும், மும்முறை கூறுவர். உண்டு, உண்டு, உண்டு என்பர். என்னே, என்னே, என்னே என்பர். இந்த மும்முறைப் பிரயோகம் வீணாக நேரத்தையும் நினைப்பையும் விரயமாக்குவது அன்றோ 'அது நன்றோ' ஒருமுறை உரைத்திடில், சரியன்றோ. என்னிடம் அத்தகைய வழக்கம் கிடையாது எப்போதும் கிடையாது. நிச்சயமாய்க் கிடையாது" என்றார். சீடனுக்கு இதை எழுதும்போது, கஷ்டமாகத் தான் இருந்தது. மும் முறைகூறலை முறையன்று என்று மொழிந்திடு புலவர், அதனையே மும்முறை கூறுகிறாரே, முறையாமோ என்று எண்ணி ஏங்கினான். ஆனால் எங்ஙனம், மனத்திலுற்றதைக் கூறுவான்; தவறு இழைத்தவர் வெறும் தமிழ்ப்புலவரல்லவே ! பிரசங்க பூஷணமாயிற்றே !

"ஒவ்வோர் சொற்பொழிவாளரும், அவையடக்கம் என்ற அவசியமற்ற பகுதியை நீட்டிச் சபையை வாட்டுவர் அடியேனிடம் அந்த நோய் அணுகுவதில்லை, வீணான வார்த்தைகள் எனக்கு வேம்பு. அவை அடக்கம் ஒரு அவசியமற்ற, பயனற்ற, சுவையற்ற, உயிரற்ற, கருத்தற்ற, முறையற்ற, சுவைப்பயனற்ற, பயனுள்ள சுவையற்ற, கருத்துமுறையற்ற, முறையான கருத்தற்ற, உயிர்ச் சுவை அற்ற, கருத்துயிரற்ற, உயிர்க்கருத்தற்ற, காரியம், என்பதை எடுத்துக்கூற நான் அஞ்சப்போவதில்லை. அஞ்சுவது யாதொன்றுமில்லை, அஞ்செழுத்தை ஓதினார் யார்க்கும் என்ற ஆன்றோர்மொழி ஈண்டு சிந்திக்கற்பாலது. ஆன்றோர் மொழியைச் சிந்திக்க வேண்டுவது ஏன் எனில், ஆன்றோர் சான்றோராகலின்." என்று, அவையடக்கத்தின் அவசியமற்ற தன்மைபற்றி, அழகுறக் கூறினார் பிரசங்க பூஷணம், சீடர் எழுதினார்.