பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிரசங்க பூஷணம்

51



பரே ! என்று கூறுவதோடு அமைதல் ஆகாது, நியாயமுமாகது. ஆகவே சைவ, வைணவ, பௌத்த, கிருத்தவ, இஸ்லாமிய அன்பர்களே என்றுதான் சபையை அழைத்தல் பொருத்தம். ஆம்! அதுபோல் எழுது என்றார், எழுதினான். புலவருக்கு அப்போதுதான் திருப்தி உண்டாயிற்று "தம்பி! பலருக்குத் தெரிவதில்லை இந்தப் பக்குவம். ஒரு பெரிய கூட்டத்திலே, பலமதத்தினர் வந்திருக்கக்கூடுமே, நாம் அனைவரையும் அழைத்தன்றோ பேசல் வேண்டும் என்ற சாதாரண விஷயம்கூடப் புரிவதில்லை, அப்படிப்பட்டவர்களின் அணைப்பிலே இருந்துதான் தமிழ் தேய்கிறது. நான் அத்தகையவனா ! நான் சைவன், என்றாலும், வைணவ, பௌத்த, கிருத்தவ, இஸ்லாமிய அன்பர்களை நாம் அலட்சியம் செய்தல் கூடாது. இந்த நன்னெறியை மட்டும் நாட்டிலே நிலை நாட்டிவிட்டால், பூலோக கைலாசம் இதுவேயாகும் " என்று கூறினார்.

அன்பரே ! என்ற ஒரே பதத்தினால், இந்த நோக்கம் நிறைவேறுமே, ஏன் அதைவிட்டு, அடுக்கிக்கொண்டிருக்கிறீர், என்று கேட்க வேண்டுமென்று சீடனுக்குத் தோன்றிற்று. ஆனால் அவன் பிரசங்க பூஷணமா, மறுத்துரைக்க.

"ஆலமரத்தடியார் கோயிலில், ஆன்றோரும் சான்றோரும் குழுமியுள்ள இக்கூட்டத்தின் கண் அடியேனைப் பேசுமாறு கேட்டது, என் பாக்கியமே அன்றோ. இத்தகைய சபையிலே, நின்று பேசக்கூடிய அறிவாற்றல் எனக்கு உண்டோ எனில், இல்லை என்பேன். ஏதோ, என்னையும் ஒரு பொருட்டாக மதித்தும் பேசுமாறு அழைத்தனர்" என்று பிரசங்கபூஷணம் கூறிட, ஏடு எழுதி, வேகமாக எழுதி முடித்தான். மேற்கொண்டு, விஷயத்தை விளக்கப் போகுமுன், அதுவரை எழுதிய பிரசங்கத்தைப் படிக்கச்சொல்லிக் கேட்டு இன்புற்றார் புலவர்.

"இதே போலத்தான், திரு. வி. கலியாண்சுந்தரனார் பேசுகிறார். ஆனால் ஒரே ஒரு வித்தியாசம். இத்தகைய