உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

கற்பனைச்சித்திரம்



கொடுப்பர். ஆக நமக்கு ஆரியர், திராவிடர் ஆகிய இருவரிடத்திலும் சீரும் செல்வாக்கும் கிடைக்கும் " என்று கூறினார். சீடன் இந்த சீலத்தைக் கடைப்பிடிப்பதாகக் கூறினான். பிரசங்கத்தைக் கூறலானார், கூறுமுன், மறுபடி ஒருமுறை சீடராகவே படித்துக் காட்டினார், தொடர்பு தெரிவிக்க. புலவர் புதுமுறுக்குடன் கூறத்தொடங்கினார் உடனே திகைத்தார். "தம்பி! ஒரு பச்சை நிறத்தாளைக் கண்டாயோ?" என்று கேட்டார். "இல்லையே! என்ன தாள் ?" என்றார் சீடர். "இன்றைய சொற்பொழிவு அழைப்பிதழ்" என்றார் பிரசங்க பூஷணம். உள்ளே ஓடினார் புத்தகங்களைப் புரட்டினார், துண்டுச் சீட்டுக் காணப்படவில்லை, துயருற்றார். மனைவியைக் கேட்டார், "அந்தக் குப்பையிலே அது எங்கே இருக்கிறதோ யார் கண்டது" என்று துடுக்காகக் கூறினர் அம்மையார். "உன் கண்களுக்கு அது குப்பைதான்! பேதாய்! அது குப்பை! அந்தக் குப்பையிலே கிடக்கும் மாணிக்கமும், மரகதமும், உனக்கென்னடி தெரியும்." என்று கண்டனக் குரலிலே பேசினார் புலவர். அம்மையார், சக்தி ஸ்வரூபமல்லவா! அவ்வளவு இலேசிலேவிடவில்லை.

"கோழி குப்பையைக் கிளறியாவது புழுபூச்சியைக் காண்கிறது, நீ இந்தக் குப்பையை கிளறிக்கிளறிக் கண்டது என்ன?” என்று கேட்டார்.

"பேதாய்! பெண்பேதாய்! பொன்னாசைகொண்ட பெண்பேதாய்! பொன்னும் பொருளும் எதற்கு? காதற்ற ஊசியும் வாராதுகாண் இக்கடைவழிக்கே" என்றார் புலவர் அந்த நேரத்திலே, அவர் காணாமற்போன சீட்டு இருக்கிறதா என்று பட்டினத்தார் புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தார்.

"காதற்ற ஊசியும் வரத்தான்காணோம், நீ கத்திக் கத்தி வந்தும்" என்று கடிந்துரைத்தார் சக்தி. பூலோகநாதர் பதில் பேசவில்லை. என்ன பேசுவது என்றே தெரிய-