பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிரசங்க பூஷணம்

55



னது எங்ஙனம்? இதோ என் நண்பர், என் ஞானாசிரியன், அருணாசல ஐயர் கூட்டிவைத்தார் திரு அருளை என்னைத் தூண்டி, ஊக்குவித்து ஏடு எழுதச் செய்தார், செய்தேன். அன்புமழை பெய்தீர்கள். இதற்குக் காரணம், இவரன்றோ ! இவர் ஓர் அந்தணர் நான் அந்தணர் குலமல்ல ! எனினும், எனக்குக் கைகொடுத்தது அந்தணரே, என் புலமையை நீங்கள் தெரிந்துகொள்ளச் செய்தவரும் அவரே. இப்படிபட்ட அந்தணர் குலத்தை ஏனோ சில பலர் நிந்திக்கிறார்கள். தமது அறிவீனத்தை அவர்கள் சிந்திக்கிறார்கள் இல்லை. சிவ! சிவ! அபசாரம்! அபசாரம்! இம்மை மறுமை இரண்டினுக்கும் இழுக்கு தேடுகிறார்கள் வழுக்கிவிழுந்த சழுக்கர்" என மள மள வென்று பொழிந்தார். சீடர் கை வலிக்க அதனை எழுதினார். அந்தப் பகுதி முடிந்ததும், பிரசங்க பூஷணம், வியர்வையைத் துடைத்துக்கொண்டு, "தம்பீ! எப்போதும் ஒன்று கவனமாகக் கேள், பிராமணர்களைப் புகழ்ந்தே பேசிவிட வேண்டும். ஏன் தெரியுமா? நாம் தமிழர், ஆகவே நாம் என்ன செய்தாலும் எதைப் பேசினாலும், எப்படி நடந்துகொண்டாலும், நமது தமிழ் மக்கள் நம்மைக் கெடுக்கமாட்டார்கள். பிராமணர்களோ, நமது இனமல்ல. ஆரியம் நுழைந்து, நம்மவரை அடுத்துக் கெடுத்திருக்கிறது. இன்னும் அதன் போக்கைத் தடுத்தால், நமக்குத் தொல்லைவிளையும். ஆகையினால் நமது சொற்பொழிவுகளிலே பிராமணர்களைப் புகழ்ந்து பேசியும், பாராட்டியும் ஆதரித்தும் வைத்தால், நமக்கு அவர்களால் தொல்லை வராது. தமிழர் கோபிப்பர், என்ன இந்தப் புலவன் இப்படிப் பிராமணர்களை ஆதரிக்கிறானே, இனப்பற்றே இல்லாமல் என்று கேட்பர். கேட்டால் என்ன! நண்பரே! நான், எந்தப் பிராமணனை ஆதரித்தேன், இன்றையப் படுபாவிகளையா? செச்சே! நான் என்ன மரக்கட்டையா? மண் பொம்மையா, எனக்கு ரோஷம் வராதிருக்க. நான் பாராட்டினது அந்தணர்களை! அன்பு நெறி, அருள்நெறி பூண்டவர்களை ஆதரித்தேன். அது பார்ப்பண குலத்துக்குள்ள பண்பா! என்று கூறினால், தமது தமிழ்த் தோழர்கள், நமது முதுகைத் தட்டிக்-