பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

நத்தத்தி லொரு கையை வைத்து அப்போ
நலங் கண்ட திண்டிக்கல்லி லொருகாலை வைத்து
இப்படி நாலு முகம் வைத்து அப்போ
ஈஸ்வர நவாபு துரை கூடாரம் வைத்து
சந்தோஷ மாகி நவாபு அப்போ
சலுதியா யிருபிள்ளை மார்களை யழைத்து
அரே பிள்ளை தாண்டவ ராயா நீ
அன்று சொன்ன கீரிடத்தைத் தருவையோ வென்றார்
அப்போது தாண்டவ ராய பிள்ளைநீ
அகமகிழ்ந்து நவாபை ஏறிட்டுப் பார்த்து
சோழவர மென்னு மூரை உனக்குத்
தோரணச் சீட்டெழுதித் தந்திட்டே னென்றான்
முறிசீட்டை கையிலே வாங்கி அப்போ
முனைவீரன் மம்முதலி சந்தோஷப் பட்டு
திருச்சினாப் பள்ளிக்கு நான் போரேன் நீங்கள்
சீக்கிரமா யரண்மனை போய்ச் சேருமென்று

நவாபு திருச்சிக்குப் போதல்



பிள்ளை மார்க்குப் புத்திமதி சொல்லி அப்போ
புகழ் பெற்ற சேனைகளை யொன்றாய்க் கூட்டி
மதுரைக்குத் தைனாத்து வைத்து பாதர்
மம்முதலி பாளையத்தை வடக்குமுகந் திருப்பி
திருச்சினாப் பள்ளிக்கு நவாபு போய்ச்
சேர்ந்தபின் முல்லைமணித் தாண்டவ ராயன்
மாஷாவின் அரண்மனைக்குச் சென்று அந்த
மங்கையைத் தாண்டவனும் ஏறிட்டுப் பார்த்து
தங்கச்சி மாஷாவே கேளு உனது
தலைவிதி யிப்படி முடிந்ததுவே தாயே
ஒன்றுக்கும் அஞ்சாதே தங்காய் உனக்
கொன்றுங் குறைவில்லை நானிருக்கும் வரைக்கும்
திருப்புவனம் வாருமம்மா வென்று அப்போ
தேருதலை[1]யாகவே தாண்டவனும் சொல்ல
அப்போ மாஷாவும் மகிழ்ந்து அண்ணே
அன்பாக ஒரு வசனஞ் சொல்லுகிறேன் கேளு
மலையாளம் போரே னானண்ணே நீ
மனதிலே கவலை வைக்க வேண்டா மென்று சொல்லி
மைந்தனைக் கையோ டழைத்து அப்போ
மதுரை விட்டு மலையாளம் நடந்து விட்டாள் மாஷா


  1. தேருதலை—தேறுதல் மொழி