பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

IV

முதற் காலம்: கன்னடிய மன்னர்களுக்கும், பாண்டிய அரசு மதுரையிலிருந்து அகன்றபின் தென் தமிழ் நாட்டில் பரவிய சிற்றரசர்களுக்கும் நடைபெற்ற போர்களின் நடை காலம்.

இரண்டாவது காலம்: மதுரை நாயக்கர்களுக்கும், இராமநாதபுரம் பாளையக்காரருக்கும் நடைபெற்ற போர்.

மூன்றாவது காலம்: பிரிட்டிஷ் ஆட்சி தமிழகத்தின் தென் பகுதியில் பரவியதை எதிர்த்து பாளையக்காரர்களது போர்கள்.

மேற்குறிப்பட்ட மூன்று காலங்களில் கான்சாகிபு சண்டை மூன்றாவது காலத்தைச் சேர்ந்தது. இக்கதைப்பாடல் கான்சாகிபுவின் வரலாற்றில் கடைசி ஏழு ஆண்டுகளின் நிகழ்ச்சிகளைப் பொருளாகக் கொண்டது. கான்சாகிபுவின் பிறப்பு, வளர்ப்பு, இளமைக் காலம், தென்னாட்டுப் பாளையக்காரர்களோடு அவன் நடத்திய போர்கள், ஆகியவை பற்றிய விவரங்களை இக் கதைப்பாடல் மிகவும் சுருக்கமாக ஆரம்ப அடிகளில் கூறுகிறது. பண்ணையூரில் பிறந்த கான்சாகிபை மூஸாலாலி என்ற பிரெஞ்சியன் வளர்த்தான். பிரட்டன் என்னும் ஆங்கிலத் தளபதியிடம் இவன் வேலைக்குச் சோந்தான். ஆங்கிலம் கற்று ஆற்காட்டு நவாபின் படையில் சேர்ந்தான். படிப்படியாக உத்தியோக உயர்வு பெற்று கான்சாகிபு, ஆற்காட்டு நவாபின் படையின் கமாண்டராக ஆனான். இந்தப் பதவியைத் தமிழில் கம்மந்தான், கும்தான் என்று கதைப்பாடல் அழைக்கும். இவனைப் பிரிட்டிஷ்காரர்கள் தங்கள் சேவகத்தில் அமர்த்திக் கொண்டனர். டச்சுக்காரர்கள், பிரஞ்சுக் காரர்களுக்கு எதிராகப் பிரிட்டீஷார் நடத்திய சில போர்களில் இவன் பங்கு பெற்று, வெற்றி பெற்றான். பரங்கிப் பெண்ணான மாஷா என்பவளை மணந்து கொண்டான்.

அக்காலத்தில் தமிழகத்தின் தென்பகுதி முழுவதிலும் வரிவசூலிக்கும் உரிமையைக் கிழக்கிந்தியக் கம்பெனி, நவாபிடமிருந்து குத்தகைக்குப் பெற்றிருந்தது. அதற்கு முன், பாளைக்காரர்கள்தான் நவாபிற்காக வரிவசூலித்து வந்தார்கள். அவர்கள் வசூலித்த வரியை நவாபிற்குக் கொடுப்பதில்லை. அதனோடு, ஒருவர் பாளையத்தில் மற்றொருவர் தலையிட்டு சண்டையிட்டுக் கொண்டார்கள். இவர்களனைவரையும் நவாப் ஆட்சிக்கு உட்பட்டு அடங்கி நடந்து வரிசெலுத்தச் செய்ய ஒருபடையோடு யூசப்கான் சென்னைலிருந்து ஆங்கிலக் கம்பெனியரால் அனுப்பிவைக்கப்பட்டான். தென் பாளையங்களின் தலைவர்களான பூலுத்தேவனோடு பல போர்கள் நடத்தினான். முடிவில் அவருடைய கோட்டையான நெல்கட்டாஞ்செவலை அழித்தான். அதன்பின் பூலுத்தேவன்