பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

V

முடிவு என்னவாயிற்று என்று தெரியவில்லை. கட்டபொம்மு நாயக்கரையும் அடக்கினான். இவர் ஜகவீர கட்டபொம்முவின் பாட்டன் ஆவார். பாளையக்காரர்களை ஒழுங்காக வரி செலுத்துமாறு செய்தான்.

இச்சேவைக்காகப் பிரிட்டிஷ் கம்பெனியார் இவனை மதுரை சுபேதாராக நியமித்தார்கள். மதுரையிலிருந்து தென்பகுதி முழுவதையும் நவாபின் பிரநிதியாக ஆண்டு, பிரிட்டிஷ் கம்பெனிக்காக வரி வசூல் செய்வது அவனது வேலை.

அவன் மதுரை சுபேதாராகி ஓர் ஆண்டிற்குப் பின் சிவகங்கைப் பாளையக்காரர் வரி செலுத்தாமல் இருப்பதைக் கண்டான். வரிப் பாக்கிக்காகத் திருப்புவனம் என்னும் ஊரை நவாபிற்குக் கொடுத்துவிட வேண்டுமென்று ஓலையனுப்பினான். இப்பொழுது சிவகங்கை பாளையக்காரருக்குத் தளவாயாக (மந்திரி) இருந்தவன் தாண்டவராயன். அவன் கான்சாகிபுவின் மனைவி மாஷாவிற்குப் பல பரிசுகளை அனுப்பி அவள் மூலம் கான்சாகிபுவை, சிவகங்கைப் பாளையக்காரர் மீது பகைமை கொள்ளாதிருக்கச் செய்ய முயன்றான். இம்முயற்சி பயனளிக்கவில்லை. “எப்படியும் திருப்புவனத்தை மதுரைச் சுபாவோடு சேர்த்துக்கொண்டே தீருவேன்” என்று கான்சாகிபு பிடிவாதமாயிருந்தான்.

தாண்டவராயன் சிவகங்கைப் பாளையக்காரனான முத்துவடுகனிடம் இந்த அபாயத்தைப் பற்றிக் கூறினான். தான் ஆற்காட்டுக்குச் சென்று நவாபிடம் கூறி, அவனை கான்சாகிபுவின் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்வதாகவும், தான் நாட்டிலில்லாதபோது முத்துவடுகன் காளையார் கோவிலுக்குப் போய் இருக்கவேண்டுமெனவும் சொன்னான். சிவகங்கைப் பாளையத்தோடு நேசமாயிருந்த பாளையக்காரர்களைப் படைதிரட்டி வைத்திருக்குமாறு செய்தியனுப்பிவிட்டுத் தாண்டவராயன் ஆற்காட்டுக்குப் புறப்பட்டான். பெரிய படையோடு ஆற்காட்டுக்குச் சென்று நவாபைப் பேட்டிகாண வேண்டும் என்று செய்தியனுப்பினான். நவாபு அவனைச் சந்தித்தான். கான்சாகிப்புவைப் பற்றிய பல குற்றச்சாட்டுகளைத் தாண்டவராயன் நவாபிடம் கூறினான். பாளையக்காரர்களிடம் வசூலித்த பணத்தைக் கான்சாகிபு நவாபிற்கு அனுப்பவில்லையென்பதும், நவாப்பின் ஆட்சிக்கு ஆதரவாயுள்ள பாளையங்களோடு பகைமை கொண்டு அவற்றைத் தானே கைப்பற்றிக்கொள்ள முயன்று வருகிறான் என்பதும் முக்கியமான குற்றச்சாட்டுகள். பல காரணங்களால் நவாபு கான்சாகிபு மீது அதிருப்தி கொண்டிருந்தான். பாளையங்களிலிருந்து வசூலித்த வரியை ஆறு ஆண்டுகளாகக் கான்சாகிபு நவாபிற்கு அனுப்பவில்லை. தனது எதிரிகளோடு கான்சாகிபு ரகசியத் தொடர்பு கொண்டிருந்தான் என்று அவனுக்குச் செய்திகள் வந்தன. ‘மார்ச்சண்டு’ என்ற டச்சுக்காரனது உதவியோடு கான்சாகிபு