பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

115






ஏப்ரல் 8


பொறுத்தாற்றும் பண்பினை, புண்ணியனே நீ அருள்க!

இறைவா, அடியார்கள் செய்த பிழைகளையெல்லாம் பொறுத்தருளிய புண்ணியனே! எனக்கும் பொறுத்தாற்றும் ஆக்கப் பண்பினை அருள் செய்க! யார் என்ன செய்தால் என்ன? குடி முழுகி விடவா போகிறது?

இறைவா, பரபரக்காத நிலையினை அருள் செய்க! மனிதர்களைப் பற்றி விரைந்து முடிவு செய்யா உயர் நிலையினை அருள் செய்க! வரவரக் கண்டு ஆராய்கின்ற உள்ளத்தினைத் தா.

பிறர் செய்யும் குறைகளைப் பொருட் படுத்தாது வாழும் நிலையினை அருள் செய்க! பிறர் குற்றம் காணாது அவர்தம் நிறையினையே கண்டு பாராட்டும் பெருந்தன்மையினைத் தந்தருள் செய்க! அறியாமல் ஆயிரம் பேசுவார்கள். இழப்புகளும் வரும், துன்பங்களும் வரும். எல்லாவற்றையும் பொறுக்கும் ஆற்றலினை நல்கி அருள் செய்க!

எல்லாவற்றையும் பொறுத்து ஏற்றுக் கொண்டு திடமனத்துடன் வாழ்வில் நடைபோட அருள் பாலித்திடுக! பொறுத்தாற்றும் பண்பே எனது உயிர்ப் பண்பாக ஏற்று ஒழுகும் ஆற்றலை அருள் செய்க!