பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கீரைத் தண்டு

29


"இதோ பார், உன் ஆடு பண்ணின அக்கிரமத்தை!" என்று அவனைக் கூப்பிட்டுக் காட்டினர்கள்; திட்டினார்கள்.

அவனா ஒப்புக்கொள்வான்? "என்ன அம்மா அப்படிச் சொல்கிறீர்கள்? என் ஆட்டை எப்போதுமே கட்டி வைத்திருக்கிறேன். நம் பையன் ஒட்டிக்கொண்டு மேய்த்து வருகிறான். அதைப் போய்ச் சொல்கிறீர்களே!” என்று சொல்லிவிட்டான்.

"இங்கே பார்;ஆடு கடிக்காமல் இப்படிஆகுமா?" என்று கேட்டார்கள் பெண்கள்.

"இந்த ஊரில் நான் ஒருத்தன்தானா ஆடு வளர்க்கிறவன்? எத்தனையோ பேர்கள் வளர்க்கிறார்கள்,எந்த ஆடு வந்து தின்றதோ?" என்றான்.

அவர்கள் அவனோடு வாய் கொடுக்கக்கூடாது என்று சும்மா இருந்துவிட்டார்கள்.

விசாகன் மாலையில் வீடு வந்து சேர்ந்தான். வந்தவுடனே சமாசாரத்தை அறிந்தான். சின்னத் தம்பியை இடிக் குரலில் அழைத்தான். அவன் ரிக்ஷா வண்டியில் அடிக்கடி போகிறவன் விசாகன்.ஆகையால் கடுமையாகக் கோபித்துக் கொள்ளத் தீர்மானித்தான்.

சின்னத்தம்பி மெதுவாக வந்தான்."என்ன ஐயா இடி விழுந்ததுபோலக் கத்துகிறாய்?" என்று கேட்டுக் கொண்டே வந்தான். அவன் முன்பே திட்டம் போட்டுக் கொண்டு வருகிறவன் ஆயிற்றே!

"அக்கிரமம் பண்ணிவிட்டு நான் கத்துகிறேனென்றா சொல்கிறாய்?" என்று விசாகன் கோபத்துடன் கத்தினான்.

"என்ன அக்கிரமத்தைக் கண்டுவிட்டாய்? என்று சின்னத்தம்பியும் இரைந்து பேசினான். ஒன்றும் தெரியாதவனைப் போலல்லவா பேசுகிறான்?

"கீரைப்பாத்தியை உன்ஆடு நாசமாக்கிவிட்டதே! பார்க்கவில்லையா?"